Published : 15 Jun 2022 07:09 AM
Last Updated : 15 Jun 2022 07:09 AM
திருச்சி: துவாக்குடி, நவல்பட்டு, பெல், திருவெறும்பூர் ஆகிய காவல் நிலையங்கள் அடங்கிய திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்தை திருச்சி மாநகர காவல் துறையுடன் இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் திருச்சி மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டிலும், மாநகரில் உள்ள காவல் நிலையங்கள் திருச்சி மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகின்றன. கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, கன்டோன்மென்ட், கே.கே.நகர், செசன்ஸ் கோர்ட், எடமலைப்பட்டி புதூர், பொன்மலை, ஏர்போர்ட், அரியமங்கலம், ரங்கம், உறையூர், தில்லைநகர், புத்தூர் அரசு மருத்துவமனை ஆகிய 14 காவல் நிலையங்கள் மாநகர காவல் துறையின் கீழ் வருகின்றன.
10 ஆண்டுகால எதிர்பார்ப்பு
நாட்டிலேயே அதிவேகமாக வளர்ந்து வரக்கூடிய நகரங்களுள் முக்கியமானதாக இருப்பதால், திருச்சியின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக வேகமெடுத்துள்ளது. குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.அதற்கேற்ப குற்றச் செயல்கள், போக்குவரத்து நெருக்கடி போன்றவையும் அதிகரித்து வருகின்றன.
எனவே, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை எளிதில் மேற்கொள்வதற்காக திருச்சி மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருவெறும்பூர், துவாக்குடி, நவல்பட்டு, பெல், சோமரசம்பேட்டை, ராம்ஜிநகர், கொள்ளிடம் (நம்பர் 1 டோல்கேட்) ஆகிய காவல் நிலையங்களை திருச்சி மாநகர காவல் துறையுடன் இணைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இதுதொடர்பாக அவ்வப்போது மாநகர காவல் துறை சார்பில்டிஜிபி அலுவலகத்துக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், இதுவரை எவ்வித விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.
எல்லை விரிவாக்கத்துக்கு...
இந்த சூழலில் திருவெறும்பூர், துவாக்குடி, நவல்பட்டு, பெல் ஆகிய காவல் நிலையங்கள் அடங்கிய திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்திலுள்ள பகுதிகளை திருச்சி மாநகர காவல் துறையுடன் இணைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்னன. இதற்காக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து புதிய கருத்துரு டிஜிபி அலுவலகத்தால் அண்மையில் கேட்டுப் பெறப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, இந்த 4 காவல் நிலையங்களின் எல்லைகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி புதிதாக வரைபடம் தயாரித்து அனுப்பி வைக்குமாறு திருச்சிமாவட்ட காவல் துறையினருக்கு டிஜிபிஅலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருவெறும்பூர் உட்கோட்ட பகுதிகளை இணைத்துபுதிய வரைபடம் தயாரிக்க மாநகர காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
விரைவில் அறிவிப்பு வெளியாகும்
இதுகுறித்து மாநகர காவல் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘இந்தவிரிவாக்கத்தின் முதற்கட்டமாக திருவெறும்பூர் காவல் உட்கோட்டம் மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட உள்ளது. இதிலுள்ள 4 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுமே தற்போதுநகரமயமாகிவிட்டன. எனவே இப்பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்த காவல் உட்கோட்டத்திலுள்ள சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மட்டுமின்றி திருவெறும்பூர் அனைத்துமகளிர் காவல் நிலையம், திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆகியவற்றையும் இணைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த கட்டங்களாக பிற பகுதிகளும், மாநகர காவல் துறையுடன் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதைவிட, மாநகர காவல் துறையின் கட்டுபாட்டுக்கு வரும்போது காவல்நிலையங்களுக்கு கூடுதலான போலீஸார் கிடைப்பர். கண்காணிப்பு விரிவடையும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். புகார்கள் மற்றும் இதர பிரச்சினைகளுக்கான அலைச்சல் தவிர்க்கப்படும்’’ என்றனர்.
பட்டியலில் விடுபட்ட மணிகண்டம்
சப் இன்ஸ்பெக்டர் நிலையிலான மணிகண்டம் காவல்நிலையம், திருவெறும்பூர் உட்கோட்டத்தில் இருந்தபோதிலும், மாநகர காவல்துறையுடன் இணைப்பதற்கான பரிசீலனை பட்டியலில் இடம்பெறவில்லை. நவல்பட்டு இன்ஸ்பெக்டரின் எல்லைக் கட்டுப்பாட்டின்கீழ் வருவதாலும், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமையவுள்ள பகுதிக்கு அருகில் இருப்பதாலும் இந்த காவல்நிலையத்தையும் மாநகர காவல்துறையுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT