Published : 14 Jun 2022 01:39 PM
Last Updated : 14 Jun 2022 01:39 PM
சென்னை: அண்ணாமலை கூறிய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படாத நிலையில், “ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் விவகாரத்தில் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும், தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அமைச்சர் சுப்பிரமணியன், "அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பாகவே அதில் முறைகேடு நடைபெற்று உள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசி வருகிறார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த டெண்டர் இன்று திறக்கப்பட்டது. இதில் அண்ணாமலை கூறிய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படவில்லை. வேறு ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "அண்ணாமலை சொன்ன நிறுவனம் 2-வது இடத்திற்கு போய்விட்டது. எனவே, முதல் இடத்தில் உள்ள நிறுவனத்திற்குதான் இந்த பணி ஆணை வழங்கப்படும். இதை டெண்டர் கமிட்டி இறுதி செய்யும்.
அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்திற்குதான் தரப்போகிறார்கள் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தியது எந்த அளவுக்கு நியாயம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆதாரத்துடன் கூறினால், தவறு நடந்து இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்து இருந்தேன்.
இன்று டெண்டர் ஒப்பன் செய்யப்பட்டத்தில் முதல் நிறுவனமாக அனித டெக்ஸ்கார்ட் நிறுவனம் வரவில்லை. பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனம்தான் வந்துள்ளது. எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்தவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுதான் நாகரிக அரசியலின் அடையாளம். வருத்தம் தெரிவிக்காவிடில் துறை சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இது மக்களின் உயிர் காக்கும் துறை. குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். யார் சுட்டி காட்டுகிறார்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. யார் சுட்டி காட்டினாலும் குறைகள் களையப்படும். அதேநேரம் இல்லாத ஒன்றை கூறி அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம். இது மக்களின் உயர் காக்கும் துறை, ஆராய்ந்து குறைகளை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT