Published : 14 Jun 2022 01:12 PM
Last Updated : 14 Jun 2022 01:12 PM
திருச்சி: "பள்ளிகளில் செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது செல்போன் கொண்டுவந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித்தரப்பட மாட்டாது" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தமிழக அரசு சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "பள்ளிக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது என்று ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேசும்போது கூறியிருந்தேன், செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித்தரப்பட மாட்டாது என்று ஏற்கெனவே அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே குழந்தைகள் படித்துக் கொண்டிருந்ததால், கவனச்சிதறல் அதிகமாக உள்ளது. அதைப்போக்கும் வகையில்தான் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தவுடன் அவர்களது மனதை புத்தாக்கம் செய்தபின்னர்தான், வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT