Published : 14 Jun 2022 12:20 PM
Last Updated : 14 Jun 2022 12:20 PM
சென்னை: குறிப்பிட்ட காலத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்காத 3 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.75,000 அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப் பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் வேம்புலி அம்மன் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, ரங்கையா சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய 3 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பணிகளில் தொய்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT