Published : 14 Jun 2022 04:22 AM
Last Updated : 14 Jun 2022 04:22 AM
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தருமபுரி, சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை (ஜூன் 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஜூன் 14-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஜூன் 15-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 16, 17-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.
ஜூன் 13-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 செ.மீ. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 6, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5, திருபுவனத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வரும் 15, 16, 17-ம் தேதிகளில் லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதி, கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT