Published : 13 Jun 2022 07:12 AM
Last Updated : 13 Jun 2022 07:12 AM
மயிலாடுதுறை: தமிழகத்தில் கட்சி அரசியலுக்குள் புதைந்து கொண்டிருக்கும் கிராம ஊராட்சிகளை மீட்டெடுப்பதுடன், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் உள்ள கட்சி அடையாளங்களை நீக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்டஊராட்சி, ஒன்றியக் குழு, கிராம ஊராட்சி என்ற படிநிலைகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இவற்றுள் கிராம ஊராட்சி தவிர்த்து மற்ற அமைப்புகளுக்கு போட்டியிடும் கட்சி சார்பிலான வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகளின் சின்னங்களும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னங்களும் ஒதுக்கப்படுகின்றன.
ஆனால், கிராம ஊராட்சித் தேர்தலில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்பதவிக்கான தேர்தல் என்பது அரசியல்சார்பற்ற முறையில், அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்பட்டு, சுயேச்சை சின்னங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.
அரசியல் கலப்பின்றி, கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இப்படியான முறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்யும் வகையில், கிராம ஊராட்சிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பேஅரசியல் கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிவிட்டது.
அதன் ஒரு அம்சமாக அரசுக் கட்டிடமான ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்களில்கூட, ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பெயர்களை கட்சியின் நிறங்களில் எழுதி வைத்திருப்பதை பரவலாக காண முடிகிறது. இந்த அடையாளங்கள் எல்லாம் நீக்கப்பட வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
அரசியல் சார்பின்றி கிராமத்தின் முன்னேற்றத்தில் ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். கிராம மக்களின் கருத்துகள் ஊராட்சி மன்றங்களில் பிரதிபலிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் நேரடி தலையீடுகளால் கிராமங்களின் வளர்ச்சி தடைபட்டுவிடக்கூடாது என்பன போன்ற காரணங்களின் அடிப்படையில், கிராம ஊராட்சி மன்றங்களுக்கு கட்சி சார்பின்றி தேர்தல் நடத்தப்படுகிறது.
அதனால்தான் கிராம ஊராட்சிகளில் மட்டும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அதிகாரமிக்கதாக இருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் சீர்குலைக்கும் வகையில் அரசியல் தலையீடுகள் பெருகிவிட்டன.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அந்தந்தக் கட்சிகளின் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கிராம ஊராட்சியில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடக் கூடியவேட்பாளர்களை வெளிப்படையாக அறிவிக்கும் போக்கு வந்துவிட்டது.
ஊராட்சி மன்ற அலுவலகங்கள் என்பது அரசுக் கட்டிடங்கள். ஆனால் இந்தக் கட்டிடங்களில் ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவரின் பெயர்கள் அவர்கள் சார்ந்துள்ளகட்சியின் நிறங்களில் எழுதப்படுகின்றன.
அதுமட்டுமில்லாமல், அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிழற்குடை, எல்லைப் பலகை போன்றவற்றிலும் கட்சிகளின் வண்ணங்களில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. சட்டப்படி இது சரியானதல்ல. கட்சி சார்பில் தேர்தல் நடத்தப்படும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில்கூட இவ்வாறு கட்சி நிறங்களில் பெயர்கள் எழுதப்படுவதில்லை.
ஆனால், கட்சி சார்பற்ற முறையில் தேர்தலை நடத்திவிட்டு, கட்சி அடையாளங்களை முன்னிறுத்தும் போக்கை பல ஆண்டுகளாக ஊராட்சிகளில் அனுமதித்திருப்பது வேடிக்கையாகவும், முரணாகவும் உள்ளது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் உள்ள கட்சி அடையாளங்களை நீக்க வேண்டும். வருங்காலங்களில் கிராமஊராட்சிகளில் அரசியல் தலையீடு இல்லைஎன்பதை அனைத்துக் அரசியல் கட்சிகளுமே உறுதிப்படுத்த வேண்டும் என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT