Last Updated : 13 Jun, 2022 02:07 PM

1  

Published : 13 Jun 2022 02:07 PM
Last Updated : 13 Jun 2022 02:07 PM

சென்னை சுற்றுலா சொகுசு கப்பலை புதுச்சேரியில் அனுமதிக்காதது ஏன்? - தமிழிசை விளக்கம்

புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகக்கலை நிகழ்வில் ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.

புதுச்சேரி: “சென்னை சுற்றுலா சொகுசுக் கப்பல் புதுச்சேரி வருவதற்கு மாநில அரசு அனுமதிக்கவில்லை; வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

ஸ்ரீ பாலாஜி வித்யாபீடத்தின் யோகா சிகிச்சைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச யோகா தின விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி புதுவை கடற்கரை சாலையில் இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகக் கலை வல்லுநர்கள் பயிற்சியாளர்கள், பழகுநர்கள் ஆகியோருடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசியது: ''பிரதமர் ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் முன்வைத்து அதனை கொண்டாட ஏற்பாடு செய்தார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவில் உதித்த யோகக் கலை இன்று உலகம் முழுவதும் பரவி, சென்ற ஆண்டு மட்டும் 199 நாடுகள் இந்த யோகா தினத்தை ஜூன் 21-ம் தேதி கொண்டாடினர். இதில் 33 நாடுகள் இஸ்லாமிய நாடுகள். எல்லோரும் யோகக் கலையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

யோகக் கலை வாழ்வியலை செழுமைப்படுத்துகிறது, வாழ்க்கையில் சவாலையும் சந்திக்க வேண்டுமென்றால் உடல் வேகமாக இருக்க வேண்டும் மனம் அமைதியாக இருக்க வேண்டும். அதனை இந்த யோகா பயிற்சி தருகிறது. யோகா காலை வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

யோகா செய்யும்போது உடலின் தசை நார்கள் பயிற்சி பெறுகிறது பலப்படுகிறது. பெற்றோர்கள் அனைவரும் 5 வயதில் இருந்தே குழந்தைகளுக்கு யோகக் கலையை பயிற்றுவிக்க வேண்டும். யோகா சொல்லிக் கொடுத்தால் கட்டுப்பாட்டோடு அறிவாளிகளாக பிள்ளைகள் வளர்வார்கள். படிக்கும் பருவத்தில் யோகா பயிற்சி நினைவாற்றலை கவனத்தை அதிகரிக்கும்.

தீபாவளி, பொங்கலை விழாக்களாக கொண்டாடி வருகிறோம். உடல்நலத்தைப் பாதுகாக்கும் யோகா தினமும் விழாவாக எல்லோரும் கொண்டாட வேண்டும் என்பதை வருங்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதிக்காதது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறுகையில், "கடலில் சர்வதேச எல்லை, இந்திய எல்லை மற்றும் மாநில எல்லை என்று தனியாக எல்லைகள் உள்ளன.

புதுச்சேரி வந்த சொகுசு கப்பலில் உள்ள சில நிகழ்வுகளுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு அனுமதி வழங்க தயக்கம் காட்டினோம்.

சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பது மாநில அரசு எண்ணம். அதேநேரத்தில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றார்போல் முடிவு எடுக்க வேண்டும். சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அந்த சொகுசு கப்பலில் இருக்கும் அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. அது நம்முடைய மாநிலத்திற்கு வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளது'' என்றார்.

நடந்தது என்ன?

முன்னதாக, புதுச்சேரிக்கு வந்த சொகுசுக் கப்பல், அனுமதி இல்லாததால் கடலிலேயே நின்றுவிட்டு புறப்பட்ட சூழலில், நேற்று மீண்டும் புதுச்சேரிக்கு வந்த கப்பல், அனுமதி இல்லாததால் பயணிகளை இறக்காமலேயே புறப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை - விசாகப்பட்டினம் - புதுச்சேரி இடையே இயங்கும் தனியார் சொகுசுக் கப்பலை தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி, இறக்கவும் திட்டமிட்டனர். இதற்கு புதுச்சேரியில் அதிமுக உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தக் கப்பலில் கேசினோ சூதாட்டங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து கடந்த 10-ம் தேதி இக்கப்பல் புதுச்சேரிக்கு வந்தது. ஆனால் அரசு அனுமதி வழங்கவில்லை என்பதால் திரும்பியது. நேற்று புதுச்சேரி கடற்கரையில் இருந்து பார்த்தபோது தனியார் சொகுசுக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. பின்னர் இக்கப்பல், புதுச்சேரி காந்தி சிலை பகுதிக்கு மிக அருகே வரை வந்து புறப்பட்டு சென்றது.

இதுபற்றி அரசு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு சொகுசுக் கப்பலில் 2 முறை வர அனுமதி கோரியிருந்தனர். ஒரு கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து புதுச்சேரி வழியாக சென்னை திரும்பும் வகையில் 5 நாள் பயணம் ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டாவது, 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்து செல்லும் வகையில் திட்டமிட்டனர்.

முதன்முறையாக கடந்த 10-ம் தேதி வந்தபோது புதுச்சேரி அரசு அனுமதி தராததால் புறப்பட்டுச் சென்றது. ஆழ்கடலில் நிறுத்தி வைத்திருந்த கப்பல் தற்போது மீண்டும் புதுச்சேரி கடலோர பகுதிக்கு வந்தது. புதுச்சேரி அரசு அனுமதி இல்லாததால் புறப்பட்டு சென்றனர்” என்று குறிப்பிட்டனர்.

புதுச்சேரி அரசின் அனுமதி கிடைக்காதபட்சத்தில் கடலூரில் கப்பலை நிறுத்தவும், அங்கிருந்து பயணிகளை புதுச்சேரிக்கு அழைத்து வந்து சுற்றிப் பார்க்கும் திட்டத்தை செயல்படுத்தவும் கப்பல் நிர்வாக தரப்பில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x