Published : 13 Jun 2022 10:00 AM
Last Updated : 13 Jun 2022 10:00 AM

பள்ளிகள் திறப்பு: கனிவுடன் வரவேற்று, அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க முதல்வர் அறிவுறுத்தல்

சென்னையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர் களுக்கு புதிய பாட புத்தகங்களை தலைமையாசிரியர் வழங்கினார் | படங்கள்: எல்.சீனிவாசன்.

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படும் சூழலில் மாணவர்களை கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் 1முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று (ஜூன் 13ஆம் தேதியன்று) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், "இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.கரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாணவ - மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x