Published : 13 Jun 2022 06:58 AM
Last Updated : 13 Jun 2022 06:58 AM
ராமேசுவரம்: தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டுக் கான மீன்பிடித் தடைக்காலம் ஏப். 15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15,0000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
இந்தத் தடைக்காலத்தில் மீனவர்கள் படகுகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் (ஜூன் 14) நிறைவடைகிறது. புதிய மீன்பிடிக் காலம் ஜூன் 15-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியோ, அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியோ மீன்பிடிக்கக் கூடாது. உரிய ஆவணங்களுடனும், பாதுகாப்பு உபகரணங்களுடனும் மீன்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட கடல் எல்லைப் பகுதிகளை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT