Published : 29 Apr 2014 10:30 AM
Last Updated : 29 Apr 2014 10:30 AM
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் திங்கள்கிழமை நடந்தது. அப் போது நிருபர்களிடம் நல்லசாமி கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் கீழ்பவானி பாசன நீர் நிர்வாகத்தை முறைப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் வறட்சி ஏற்பட்டு வருகிறது.
கடந்த 2002–03ல் வறட்சி ஏற்பட்டது. தற்போது மீண்டும் தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி வருகிறது. கடந்த 2012-ல் 10 சதவீத பருவ மழை குறைந்தது. அதற்கு அடுத்த ஆண்டு 20 சதவீதம் பருவ மழை குறைந்துள்ளது. 1000 அடி ஆழத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் வறண்டு போயுள்ளன.
வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பனை, தென்னை மரங்கள் பட்டுப் போய் விட்டன. பொதுமக்கள் குடிநீருக்காக அலை கின்றனர். தமிழகத்தில் குடிநீர் விற்பனை பெரிய வணிகமாக மாறி விட்டது.
தமிழகத்தில் இந்த ஆண்டு 45 சதவீத பருவமழை பொய்த்து போகும் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதற்கேற்ப கோடை மழையும் சரிபாதியாக குறைந்துள்ளது. எனவே, தமிழக விவசாயிகளையும், மக்களையும் காக்கும் வகையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதோடு, விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT