Published : 12 Jun 2022 06:46 PM
Last Updated : 12 Jun 2022 06:46 PM
சென்னை: "ஆளுநர் ஆர்எஸ்எஸ்-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு ஆளுமை. அவர் சனாதன தர்மமே இந்தியாவை உருவாக்கியிருக்கிறது, இந்த தேசத்திற்கான ஆன்மாவான அரசமைப்பு சட்டத்தை வழங்கியிருக்கிறது என்றெல்லாம் அவர் உளற ஆரம்பித்திருக்கிறார். இது தேசத்திற்கு நல்லதல்ல. அவர் வகிக்கும் பொறுப்புக்கும் அழகல்ல" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சர்வதே குழந்தை தொழில்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: " நுபுர் சர்மாவையும், நவீன் ஜின்டாலையும் கைது செய்து சிறைப்படுத்தினால் போராட்டங்கள் நடக்காது. அவர்களை கைது செய்ய வேண்டும். இவர்கள் மத வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். இவர்களது பேச்சு வெறும் விமர்சனம் அல்ல. ஒரு குறிப்பிட்ட மதங்களைச் சார்ந்தவர்கள் மீது, வெறுப்பை உமிழும் அரசியல். ஆகவே, இந்த வெறுப்பு அரசியலுக்கு எதிராகத்தான் இப்போது மக்கள் போராடுகின்றனர்.
ஆளுநர் ஒரு நூறு விழுக்காடு ஆர்எஸ்எஸ் தயாரிப்பு. ஆர்எஸ்எஸ்-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு ஆளுமை. அவர் இங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே, அதனை எதிர்த்து, அவர் ஆளுநராக இங்கு வரக்கூடாது என முதன்முதலில் குரல் எழுப்பியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கு அவர் உண்மை முகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறார்.
அவர் சனாதன தர்மமே இந்தியாவை உருவாக்கியிருக்கிறது, இந்த தேசத்திற்கான ஆன்மாவான அரசமைப்பு சட்டத்தை வழங்கியிருக்கிறது என்றெல்லாம் அவர் உளற ஆரம்பித்திருக்கிறார். இது தேசத்திற்கு நல்லதல்ல. அவர் வகிக்கும் பொறுப்புக்கும் அழகல்ல" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT