Published : 12 Jun 2022 05:45 PM
Last Updated : 12 Jun 2022 05:45 PM
புதுச்சேரி: சுண்ணாம்பாறு படகு குழாமில் சூரிய உதய படகு சவாரி அறிமுகமாகிறது. அதே நேரத்தில் 24 மணி நேரம் மதுவிற்பனை அனுமதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு இல்ல வளாகத்தில் உணவகம் பொதுமக்களின் வசதிக்காக, உணவு மற்றும் குளிர்பானங்களுக்காக நாள் முழுவதும் (24 × 7) செயல்படும். அத்துடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். சுண்ணாம்பாற்றில் நீர் விளையாட்டுகள், சூரிய உதய - படகு சவாரி காலை 06.00 மணி முதல் தொடங்கப்படும். காலை 06.00 மணி முதல் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் அனுமதிக்கப்படுவர். கர்ப்பிணிப் பெண்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் சுண்ணாம்பாறு படகு இல்லத்தில் நுழைவு கட்டணம் இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளார்.
இதில் 24 மணி நேரமும் மதுவிற்பனை அனுமதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன், தமிழர் களம் செயலாளர் அழகர், தன்னுரிமைக் கழகத் தலைவர் சடகோபன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் பாவாடைராயன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் வேலுச்சாமி, செம்படுகை நன்னீரகம் தலைவர் ராம்மூர்த்தி, படைப்பாளர் இயக்கத் தலைவர் தமிழ்நெஞ்சன், ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ''சுண்ணாம்பாறு படகுக் குழாம் வளாகத்தில் 24 மணி நேரமும் உணவு, குளிர்பானம், மதுபானம் விற்பனை செய்யும் கடைகள் திறக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே ஒரு விதமான பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவோடு பண்பாட்டு சீர்கேடுகளை உருவாக்கும். மேலும், படகு குழாமில் சுற்றுலா பயணிகளை விட மதுப்பிரியர்களின் கூட்டம் தான் அதிகரிக்கும். இதனால், சட்டம் ஒழுங்குச் சீர்குலையும்.
சுற்றுலா என்ற பெயரில் சூதாட்டம், குடியாட்டம், களியாட்டம் போன்ற கட்டுப்பாடற்ற சீரழிவுகளை வளர்த்து அதன் மூலம் பணம் ஈட்டுவது, மக்கள் நலன் சார்ந்த அரசுக்கு உகந்தது அல்ல. ஆகவே வளர்ந்துவருகிற இளம் தலைமுறையினரைத் தவறான திசை நோக்கிச் செல்ல அரசே வழிகாட்டுதல் கூடாது.
குடித்துச் சீரழிந்து வருகிற பல குடும்பங்களை மேலும் சீரழிய அரசு துணைபோகக் கூடாது. சுற்றலாப் பயணிகளும் நம் மக்கள் தான். அவர்கள் நலமும் பாதுகாப்பும் பேணப்படல் வேண்டும். ஆகவே, நாகரிகமான சுற்றுலா வளர்ச்சியை உருவாக்கி, சுற்றுலாப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க 24 மணி நேர மது விற்பனை அறிவிப்பை அரசு திரும்ப பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT