Published : 11 Jun 2014 06:35 PM
Last Updated : 11 Jun 2014 06:35 PM

ஓட்டை உடைசலாக இயங்கும் அரசு பஸ்களுக்கு அஞ்சலி

ஓட்டை, உடைசலாக இயங்கி, பயணிகளை சிரமத்துக்குள் ளாக்கும் அரசு பஸ்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பெரும்பாலானவை ஓட்டை, உடைசலாகவே உள்ளன. இதனால், அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படு கின்றன.

மழைக் காலங்களில் குமரி மாவட்ட பஸ்களில் பயணிப்போர் பஸ்ஸுக்கும் ஒழுகும் மழைநீரில் குளித்தபடி பயணிக்கின்றனர். இதை சுட்டிக்காட்டி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், செவ்வாய்க் கிழமை நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர். சேதமடைந்த அரசு பஸ் ஒன்றுக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவிப்பதாக பதாகை ஒன்று வைத்திருந்தனர். அதற்கு மிகப்பெரிய மாலை சூட்டி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

போராட்டத்தை மாநிலத் தலைவர் தினகரன் துவக்கி வைத்து பேசுகையில், ‘குமரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் 32 சதவீத பஸ்கள் 14 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. தற்போது, அவை பழுதுபட்ட நிலையிலேயே இயக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் ஓடி உருக்குலைந்த பஸ்கள் குமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தினசரி 25-க்கும் அதிகமான பஸ்கள், பாதி வழித்தடத்தில் பழுதாகி நின்று விடுகின்றன. தரமான பஸ்கள் இயக்க வேண்டும்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x