Published : 12 Jun 2022 03:41 PM
Last Updated : 12 Jun 2022 03:41 PM
சென்னை: "சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியலமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றுதான் சொல்கிறது. அத்தகைய எல்லையை மறந்தும், மீறியும் ஆளுநர் தனது கருத்தளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது சரியல்ல" திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் பேசிய பேச்சுக்களுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக எண்ணங்கள் என்பவை அவரது தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். அவற்றை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அரசியல் சட்டத்தின் நீதிநெறிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு பதவி நிலையில் இருக்கும் ஒருவர் தெரிவிக்கும் கருத்தானது அத்தகைய சட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகத்தான் அமைய வேண்டும். சட்டத்தை மீறியதாகவோ, சட்டத்தை மீறுவதாகவோ அமையக் கூடாது. இதனை ஆளுநர் நன்கு அறிவார் என நினைக்கிறேன்.
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்” என்று பேசி இருக்கிறார். இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்த சனாதன தர்மத்தை நிலைநாட்டும் வன்முறைப் பாதையை நியாயப்படுத்தியும் பேசி இருக்கிறார்.
"சோமநாதர் கோயில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது" என்றும் பேசி இருக்கிறார் ஆளுநர். இவை அவர் வகிக்கும் அரசியல் சட்டப் பதவிக்கு அழகல்ல.வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்? யாருக்கு அவர் வழிகாட்டுகிறார்?
''இந்தியா என்பது இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக உள்ளது'' என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை. ஆளுநரின் உரை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைக் கிழித்தெறிவதாக அமைந்துள்ளது. சமயச்சார்பற்ற தன்மையைப் பிரதிபலிக்க வேண்டிய ஒருவர், ஒரு சமயத்தின் சார்பாளராகக் காட்டிக் கொள்வதையும் தாண்டி - மாற்று மதத்தினர் மீது மனவேறும் மாறுபாடும் கொள்ளக் கூடிய கருத்துக்களையும் - அதனை வன்முறைப்பாதையில் எதிர்கொள்ளலாம் என்ற தூண்டுதலையும் பொதுவெளியில் பேசுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
அமெரிக்கக் குண்டுகளால் இவை தகர்க்கப்பட்டதை நியாயப்படுத்தி கருத்துச் சொல்லி இருப்பது நாட்டில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும் சிந்தனை ஆகும். அமைதி தவழும் தமிழகத்தில் இத்தகைய கருத்துகளை ஆளுநர் என்ற பொறுப்புள்ள பதவியில் இருக்கும் போது ஒருவர் சொல்வதன் பின்னணி பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் விதைப்பதாக உள்ளது. சிலரின் சதிச்சிந்தனைகளுக்கு ஆளுநரின் இந்தக் கருத்துகள் தூபம் போடுவதாகவும் உள்ளது.
இந்திய சமுதாயம் வேற்றுமை மிகுந்தது ஆகும். பல்வேறு இனம், மொழி,மதம், பண்பாடு, உணவுப்பழக்க வழக்கம், உடைகள், எண்ணங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. இத்தகைய வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இதில் பிரிவினை எண்ணத்தை உருவாக்கி, இந்தியாவை நிலைகுலைய வைக்க பல்வேறு சீர்குலைவுச் சக்திகள் முயன்று வருகின்றன. சமீப காலமாகச் சீர்குலைவு சக்திகள் அதிகமாக தலை தூக்கி வருகின்றன. அத்தகைய சக்திகளுக்கு வழிகாட்டுவதாக ஆளுநரின் இந்தப் பேச்சு அமைந்திருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே அதனைக் கண்டிக்க வேண்டியதாக உள்ளது.
இந்தியாவை வழிநடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தானே தவிர, சனாதன தர்மம் அல்ல என்பதை ஆளுநருக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். மனுதர்மத்தின் ஆட்சி நடக்கவில்லை, மக்களாட்சியே நடக்கிறது.
சனாதன தர்மம் என்பது சாதிக்கொரு நீதி சொல்வது ஆகும். ஆனால் இப்போது நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தின் முன் அனைவரும் சமமே தவிர, வேறுபாடுகள் இல்லை. மனிதனை நான்கு வர்ணமாகப் பிரித்து, அதில் உயர்வு தாழ்வு கற்பித்து - சலுகையிலும் தண்டனையிலும் கூட சாதி வேற்றுமையை நிலை நிறுத்திய சனாதன காலத்தின் மேல் 'பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டக் குண்டுகள்' வீசப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை எல்லாம் மறந்து விட்டு ஆளுநர் ரவி இன்னும் சனாதனம் பேசுகிறார். அமெரிக்க வெடிகுண்டுகளைப் பற்றி படித்திருக்கும் அவர், இந்தியாவின் உருவாக்கப்பட்ட சட்டங்களின் வரலாற்றை அறியாமல் இன்னமும் சனாதனம் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பது அவரது காலாவதியாகிப் போன சிந்தனையையே காட்டுகிறது.
புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து தினமும் பேசிவரும் ஆளுநர் , இந்தியச் சமூக - சட்ட அமைப்புகளில் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் கற்றுக் கொண்டு, அதனைப் படித்துப் பார்த்து, உள்வாங்கிக் கொண்டு கருத்துக்களைச் சொல்வது சரியாக இருக்கும். யாருக்குச் சார்பாகத் தன்னைக் காட்டிக் கொள்ள நினைக்கிறாரோ, அவர்களாலேயே மீண்டும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாதவை சனாதனக் கொள்கைகள் என்பதை அவர் மறந்துவிட வேண்டாம்.
90 விழுக்காடு மக்களுக்கு எதிரானது சனாதனம். சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்துக்கு எதிரானது சனாதனம். எனவே, அதனை நியாயப்படுத்தி கருத்துகளை உதிர்ப்பது, இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கே எதிரானது ஆகும்.
சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றுதான் சொல்கிறது. அத்தகைய எல்லையை மறந்தும், மீறியும் ஆளுநர் தனது கருத்தளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது சரியல்ல. மதவாத, சனாதன, வர்ணாசிரம, வன்முறைக் கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தெரிவிப்பது முறையுமல்ல, சட்டமீறல் ஆகும். அவர் ஏற்றுக் கொண்ட பதவியேற்பு உறுதிமொழிக்கு முற்றிலும் முரணானது ஆகும்.
எனவே, இப்போது சொல்லிய கருத்தை திரும்பப் பெற்று, இனிச் சொல்லாமல் இருக்கவும் உறுதி எடுக்க ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT