Published : 12 Jun 2022 08:00 AM
Last Updated : 12 Jun 2022 08:00 AM
குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் சிறார்களுக் கான சிறப்பு பயிற்சி மையத்தை மத்திய அரசு நிரந்தரமாக மூடியது. இந்த மையத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என திட்ட பணியாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
வறுமையின் காரணமாக, சிறார்களை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவதை தடுக்ககடந்த 1986-ம் ஆண்டு குழந்தைத்தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழந்தைத்தொழிலாளர் தடுப்புப் பிரிவினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சுகாதார மற்றும் தொழிலக பாதுகாப்புத்துறையினர், தொழிலாளர் நலத்துறையினர் உள்ளிட்டஅலுவலர்கள் அடங்கிய அமலாக்கக் குழுவினர் (என்போர்ஸ்மென்ட் கமிட்டி) குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து மீட்க, தொடர்கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினரால் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு பயிற்சியளிக்க மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் ‘சிறப்பு பயிற்சி மையங்கள்’ நாடு முழுவதும்இயங்கி வந்தன. இம்மையங்களை கடந்த மார்ச் இறுதியுடன் நிரந்தரமாக மூடுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மீட்கப்படும் சிறார்கள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தேசிய குழந்தைத் தொழிலாளர் தடுப்பு திட்டத்தின் கோவை மாவட்ட இயக்குநர் விஜயகுமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
சட்டப்படி 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும், 15 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளை கடினமான பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது. குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் சிறார்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, 9 முதல் 14 வயதுடைய சிறார்கள் மட்டும் மீட்கப்பட்டவுடன் நேரடியாக பள்ளியில் சேர்க்கப்படமாட்டார்கள். அவர்கள் மத்திய அரசின் சிறப்பு பயிற்சி மையத்தில்சேர்க்கப்படுவர். இங்கு அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்து, வேலை செய்யும் மன நிலையிலிருந்து கல்வியை நோக்கி எண்ணத்தை மாற்ற பயிற்சி அளிக்கப்படும். மேலும், விளையாட்டாக கற்பது, அனுபவக் கல்வி, கதைகள் மூலம் கற்பித்தல், திறன் வளர்ப்பு பயிற்சி போன்றவை இம்மையத்தில் அளிக்கப்பட்டு வந்தன. குழந்தைத் தொழிலாளர் மட்டுமின்றி, பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரியர், அலுவலர், பயிற்றுநர்,சமையல் உதவியாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்படுவர். 6 மாதம்முதல் இரண்டரை ஆண்டுகள் வரை இம்மையங்கள் இயங்கும். சிறார்களின் மனநிலை கல்விச்சூழலுக்கு மாற்றப்பட்ட பின்னர், பள்ளிக்கு அனுப்பப்படுவர். மையத்தில் உள்ளசிறார்கள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்ட பின்னர் அந்த மையம்மூடப்படும். கோவை மாவட்டத்தில் கடந்த 2019-20ம் ஆண்டில் 27 சிறப்பு பயிற்சி மையங்கள் இருந்தன. கரோனா பரவலால் தற்காலிகமாக மையங்கள் மூடப்பட்டன. பின்னர்,2021-ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட போது, 25 இடங்களில் இம்மையங்கள் இயங்கின. இந்நிலையில், கடந்த மார்ச் முதல் தேசிய அளவில் நிரந்தரமாக இம்மையங்களை மூடி மத்திய அரசு ஆணை பிறப்பித்துவிட்டது. மீட்கப்படும் சிறார்களுக்கு இம்மையம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் திட்டப் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் கூறும்போது, ‘‘மீட்கப்படும் சிறார்களுக்கான சிறப்பு பயிற்சி மையத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.அதேபோல, மாநில அரசும் இம்மையங்களை ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மனு அளித்துள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT