Published : 23 May 2016 11:53 AM
Last Updated : 23 May 2016 11:53 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவும், தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதியாகவே தொடர்கின்றன. இந்த முறையாவது அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமா என்ற ஏக்கம் மக்களிடையே எழுந்து ள்ளது.
தமிழகத்தின் விளவங்கோடு, கேரளத்தின் பாறசாலை ஆகிய பகுதிகளின் விவசாயத்துக்குப் பயன்படும் வகையில், கடந்த 1963-ல் இரு மாநிலங்கள் சார்பிலும் கால்வாய் வெட்டப்பட்டு நெய்யாற்றின் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ‘கேரள நீர் ஆதாரங்களில் இருந்து பிற மாநிலங்களுக்குத் தண்ணீர் விநியோகிக்கக் கூடாது’ எனப் புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி, தமிழகத்தின் விளவங்கோடு தாலுகாவுக்கு வந்துகொண்டிருந்த தண்ணீரை கேரள அரசு நிறுத்தியது. இதனால், விளவங்கோடு தாலுகாவில் நெல் உள்ளிட்ட முக்கிய பயிர்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மார்த்தாண்டம் சுற்று வட்டாரக் கிராமங்களில் பல ஆயிரம் குடும்பத்தினர் தேனீ வளர்ப்பை குடிசைத் தொழிலாகச் செய்கின்றனர். எனவே, அப்பகுதியில் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. அதேபோன்று அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங் களில் ஈரப்பதம் தொடர்பான விதிமுறையை காரணம்காட்டி குமரியில் விளையும் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.
மீனவர்கள் பிரச்சினை
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஆபத்தில் சிக்கினால் அது தொடர்பாக தெரிவிக்கவும், உதவிகோரவும் தொலைத் தொடர்புக் கருவிகள் வழங்க வேண்டும். மீனவர்கள் காணாமல் போகும்போது அவர்களை கண்டுபிடிக்க குமரி மாவட்டத்துக்கு ஹெலிகாப்டர் வேண்டும். மீன்களைப் பதப்படு த்தும் நிலையங்களை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் கிடப்பில் உள்ளன.
ராஜாக்கமங்கலம் பகுதியில் மத்திய அரசின் சாய் விளையாட்டு மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்பட வில்லை.
ரப்பர் அதிக அளவில் விளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையமும், ரப்பர் தொழிற்சாலையும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. ரப்பர் விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தால் குமரி மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் இருந்து மண்டைக்காடு வரை செல்கிறது ஏ.வி.எம் கால்வாய். இதைக் கேரள அரசு முறையாகப் பராமரிக்கிறது. ஆனால், தமிழகப் பகுதியில் உள்ள அந்த கால்வாய் ஆக்கிர மிப்புகளின் பிடியில் சிக்கியுள்ளது. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ள இந்த 6 எம்.எல்.ஏ.க்களால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற முனைப்புடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT