Published : 11 Jun 2022 01:35 PM
Last Updated : 11 Jun 2022 01:35 PM
சென்னை: கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அதிர்ச்சியான தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கருத்தரிப்பு மையங்களில் வழங்கப்படும் பல்வேறு வகையான சிகிச்சைகளைக் கண்காணிக்க இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை மத்திய அரசு சென்ற ஆண்டு அமல்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு உட்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.
இந்நிலையில், ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தற்போது இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக சுகாதார துறை அமல்படுத்தவுள்ளது. இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையில் இந்தக் குழுவிற்கு குடும்பநலத் துறை இயக்குநர் உப தலைவராக இருப்பார். மேலும், மாதர் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா உள்ளிட்டோர் குழுவில் இதர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சட்டத்தின் படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்களிடம் இருந்து மட்டும்தான் கருமுட்டைகள் வாங்க வேண்டும், வாழ்நாளில் ஏழு கருமுட்டைகள் வரை மட்டுமே கொடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவர், கருமுட்டை அளிக்கும் பெண்ணை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது, எந்த மோசடியிலும் ஈடுபடக் கூடாது. மீறி ஈடுபட்டால், முதல் முறை குறைந்தபட்சம் ஐந்து லட்ச ரூபாயும், அதிகபட்சம் 10 லட்ச ரூபாயும், மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பத்து லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு நடைமுறையில் உள்ள இனப்பெருக்க தொழில்நுட்பம், தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்கும் விதமாகவும், தமிழக சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை தனியார் மருத்துவமனைகள் முறையாக பின்பற்றபடுகிறதா என்பது தொடர்பாகவும் இனிவரும் நாட்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT