Published : 11 Jun 2022 12:53 PM
Last Updated : 11 Jun 2022 12:53 PM
சென்னை: கோவையில் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 மேம்பாலங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூரில் ரூ.230 கோடி செலவில் ராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கியச் சந்திப்புகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணோலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் ரூ.230 கோடி செலவில் 3.15 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தால் ராமநாதபுரம், ஓலம்பஸ் மற்றும் சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகள் மற்றும் அல்வேனியா பள்ளி சந்திப்பு, சவுரிபாளையம் சந்திப்பு, புளியகுளம் பிரிவு சாலை சந்திப்பு, வானொலி நிலையம் சந்திப்பு, பந்தய சாலை சந்திப்பு, வாலாங்குளம் சாலை சந்திப்பு ஆகிய ஆறு இதர சந்திப்புகளிடையே உள்ள போக்குவரத்து நெரிசல் குறையும்.
அத்துடன், சிக்னல் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்வதால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.60 கோடி செலவில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலத்தால் கவுண்டம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இதன்மூலம் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT