Published : 11 Jun 2022 07:43 AM
Last Updated : 11 Jun 2022 07:43 AM
உதகை: தமிழகத்தில் சூழல் மண்டலங்கள் உருவாக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்கு சூழல்மண்டலம் உருவாக்க வேண்டும்என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை கொண்டிருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதில் சூழல்முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்கள் 1 கி.மீ. அளவுக்கு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இம்மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்கக் கூடாது. மேலும் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சூழல்மண்டலங்களில் உள்ள கட்டுமானங்கள் குறித்த பட்டியலை தயாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்துமாநில தலைமை வனப் பாதுகாவலர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மலை பிரதேசம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனம்கொண்ட பகுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் பாதுகாக்கப்பட்ட வனத்தில் எல்லையோரம் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், முதுமலை புலிகள் காப்பக கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விஷயத்தில் தமிழக அரசுஉடனே தலையிட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகிராம மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதுதொடர்பாகஅரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட கூட்டம் நடைபெறஉள்ளது. தொடர்ந்து போராட்டம் நடத்தவும் ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள்கூறும்போது, ‘‘வனப் பகுதியையொட்டி பல ஆண்டுகளாக வசிக்கும் நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சமாக உள்ளது. எனவே அரசு தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கூறும்போது, ‘‘வனங்களில் இருந்து விலங்குகள் வெளியேறும் பகுதிகளில், அவற்றால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களிலும் சூழல் மண்டலம் உருவாக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்கெங்குசூழல் மண்டலங்கள் உருவாக்குவது என ஆய்வு நடந்து வருகிறது.
சில பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்கள், வனத்தை ஒட்டியே உள்ளன. பழவேற்காட்டை ஒட்டியே13 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் எங்கு அமைப்பது என ஆலோசித்து முடிவு செய்யப்படும். சூழல் மண்டலங்கள் அமைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT