Published : 23 May 2016 09:51 AM
Last Updated : 23 May 2016 09:51 AM
வடக்கு மண்டலத்தில் பாமகவுக்கு தனி செல்வாக்கு உண்டு எனவும், 80 தொகுதிகளில் பாமக தனிப்பெரும் சக்தியாக இருக்கிறது என்றும் பாமக தலைமை கூறி வந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் அது வெறும் மாயை என நிரூபணமாகியுள்ளது.
காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், சென்னை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பாமக பலம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால் பாமகவின் உண்மை நிலை வெளிவரவில்லை. ஜாதி விகிதாச்சார அடிப்படையில் வட மாவட்டங்களில் பாமக பலம் பொருந்திய கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
கடந்த காலங்களில் திராவிடக் கட்சிகளின் துணையோடு தேர் தல் களம் கண்ட பாமக, 2016 தேர்தலில் தனித்து களமிறங்கியது. அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி, முதலமைச்சர் வேட் பாளராக தன்னை அறிவித்து, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத் தின்போது தன்னை மட்டுமே பிரதானமாக சித்தரித்துக் கொண்டு, திமுக, அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை அவர் வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தில் 200 தொகுதிகளில் பாமக வெல்லும் என்று கூறி வந்தனர்.
தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், பாமகவின் கோட்டை என பாமகவினரால் கூறப்பட்டு வந்த வடக்கு மண்டலத்தில் ஒரு சில தொகுதிகளைத் தவிர்த்து ஏனைய தொகுதிகளில் 3 மற்றும் 4-வது இடங்களைத்தான் பாமக பிடித்துள்ளது.
குறிப்பாக அன்புமணி போட்டியிட்ட பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் 18 ஆயிரம் மற்றும் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாமக 2-ம் இடத்தையும், தருமபுரியில் 3-ம் இடத்தையும், அரூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் விசிக வேட்பாளரை விட குறைவான வாக்குகள் பெற்று 4-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
1991-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முதன்முறையாக தனித்து சந்தித்த பாமக பண்ருட்டியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றது. தற்போது அதே தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. அதேபோல் கொளத்தூர், எழும்பூர், திருவிக நகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.
பலருக்கு வாய்ப்பு இல்லை
இதுபற்றி அண்மையில் பாமகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. கட்சி நடத்தும் போராட்டங்களில் உள்ளூர் நிர்வாகிகள் முக்கிய பங்கெடுக்க வேண்டும். கட்சிக்காக செலவு செய்ய வேண்டும். ஆனால் தேர்தலில், கார்ப்பரேட் கம்பெனி நிர்வாகிகளை வேட்பாளராக்கி அவருக்கு வேலை செய்ய சொன்னால் எப்படி வேலை செய்வது?
பாமக தொடங்கியது முதல் பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன். கடந்த காலங்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தனித்து நிற்கும்போது கூட வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, வன்னியர் சங்கத்தை வைத்துத்தான் கட்சி நடத்தி வந்தோம். ஆனால் தற்போது அன்புமணி பெயரை மட்டுமே உச்சரிக்க வேண்டும்; கட்சித் தலைவர் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் கூட மேடை ஏற அனுமதி கிடையாது என்கின்றனர். கட்சிக்கு கட்டுப்பாடு தேவைதான். கட்டுப்பாடு என்ற பெயரில் கடிவாளத்தை போடக் கூடாது.
பொதுவாக வட மாவட்டங்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரிக்கும் குறைவானவர்கள். அப்பகுதியில் கடந்த காலங்களில் எத்தனையோ பேர் தியாகம் செய்து கட்சியை முன்னெடுத்து சென்றனர். இன்று அவர்களை மறந்துவிட்டு முழுக்க முழுக்க சமூக வலைதளங்களை நம்பியதும், சர்வாதிகார போக்கும், தீவிர தலித் எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளும்தான் வடக்கு மண்டலத்தில் பாமகவுக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT