Published : 10 Jun 2022 04:54 PM
Last Updated : 10 Jun 2022 04:54 PM

விசாரணை கைதிகளை இறக்கும்வரை தாக்குவது; காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: விசாரணை கைதிகளை இரக்கமற்ற முறையில் இறக்கும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என காவல்துறையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் 'காவல் துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் 'காவல் துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். உள்துறை செயலாளர், டிஜிபி அடங்கிய மாநில குழு மற்றும் ஆட்சியர், காவல்துறை எஸ்பி அடங்கிய மாவட்ட குழுக்களை அமைத்த சட்டத்தை திருத்த போதிய அவகாசம் வழங்கியும் திருத்தவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியதுடன், புகார் ஆணையம் அமைத்த சட்டத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருத்தம் செய்யாவிட்டால் அதை ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். சட்டத்தில் திருத்த செய்வது தொடர்பாக அரசு தெரிவிப்பதற்கு இறுதி அவகாசம் வழங்கி வழக்கை தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர்கள் தரப்பில் காவல் நிலைய மரணங்களில் 2018-ம் ஆண்டு தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், 76 காவல் மரணங்கள் 5 ஆண்டுகளில் நடந்தும், ஒரு வழக்கில் கூட தண்டனை விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதனால் இந்த வழக்கு முக்கியமான ஒன்று என்றும், உச்ச நீதிமன்றம் கண்காணித்தாலும், சட்டத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் இல்லை என்பதால், இந்த வழக்கின் உயர் நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதால் தமிழக அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. உள்துறை செயலாளர்தான் குழுவிற்கு தலைமை வகிக்கிறார். அவர் காவல்துறை சார்ந்தவர் இல்லை என்பதாலும் அவர் தலைமையில் குழு அமைத்ததில் எந்த தவறும் இல்லை . தமிழகம் மட்டுமல்லாமல் பஞ்சாப், சட்டீஸ்கர், ஹரியாணா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இல்லாமல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் வாதிடப்பட்டது.

அப்போது நீதீபதிகள், எந்த காரணத்திற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ அதற்கு எதிராக அரசின் சட்டம் உள்ளது. உச்ச நீதிமன்ற நிலுவை காரணமாக நீதிபதியை தலைவராக நியமிக்க முடியாது எனக்கூற முடியாது. விசாரணை கைதிகளை அழைத்து வரும்போது இரக்கமற்று தாக்குவது, அதனால் ஏற்படும் மரண குற்றங்கள் ஆகியவை காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என்றும் கடுமையாக சாடினர்.

ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க அரசு அஞ்சுகிறதா என, கேள்வி எழுப்பினர். இதுபோன்ற கொடுங் குற்றங்களில் நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு தேவை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைத்தால் நல்ல நிர்வாகத்தை காட்டுவதாக அமையும் என்றும், அரசுக்கு எதிரான உத்தரவாக அல்லாமல், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரானதாக மட்டுமே கருத வேண்டுமென தெரிவித்து, மாநில அரசே நல்ல முடிவெடுத்து முறையான புகார் ஆணையத்தை அமைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.

காவல் நிலைய விசாரணையில் விக்னேஷ் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்திற்கு, கடிதம் வந்தததாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரத்தில் முதல்வர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், தாமாக முன்வந்து வழக்கை எடுக்கவில்லை என விளக்கமளித்தனர்.இதையடுத்து விசாரணையை ஜூன் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x