Published : 10 Jun 2022 04:31 PM
Last Updated : 10 Jun 2022 04:31 PM
சென்னை: "பேரறிவாளன் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு ஆறு தமிழர்களையும் விடுதலைசெய்து மாநிலத்தின் தன்னுரிமையை நிலைநிறுத்த வேண்டியது தமிழக அரசின் தார்மீகக் கடமையாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: " ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில், நீண்ட நெடிய சட்டப்போராட்டம் நடத்தியதன் பயனாக தம்பி பேரறிவாளன் விடுதலைப் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு பேருக்கும் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது ஏமாற்றமளிக்கிறது. தம்பி பேரறிவாளன் தொடுத்த வழக்கின் தீர்ப்பில், அமைச்சரவைத் தீர்மானமே இறுதி முடிவென்றும், தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தானென்றும், இவ்விடுதலை தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லையென்றும், விடுதலைக்கோப்பை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதற்கு சட்டப்பூர்வப் பின்புலமில்லையென்றும் தெளிவுப்படக்கூறி, மாநிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தி, தமிழக அரசுக்கு வழிகாட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆகவே, அதனை அடிப்படையாகக் கொண்டு ஆறு தமிழர்களையும் விடுதலைசெய்து மாநிலத்தின் தன்னுரிமையை நிலைநிறுத்த வேண்டியது தமிழக அரசின் தார்மீகக் கடமையாகும்.
கடந்த 09-09-18 அன்று, முந்தைய அதிமுக ஆட்சியில் எழுவர் விடுதலைக்காக, 161-வது சட்டப்பிரிவின்படி தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டத் தீர்மானத்திற்கு ஒப்புதலளிக்காது, காலங்கடத்தி குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் செயலைக் கண்டித்து, 142-வது சட்டப்பிரிவு தரும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தம்பி பேரறிவாளனை விடுதலைசெய்தது உச்ச நீதிமன்றம்.
விடுதலை செய்யக்கோரும் சட்டமன்றத் தீர்மானமும், பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் மீதமிருக்கும் அறுவருக்கும் பொருந்தும் எனும் அடிப்படையில் இதனைக்கொண்டு அவர்களது விடுதலைக்கான வாசலை திறந்துவிட வேண்டியது பேரவசியமாகிறது. அதனைவிடுத்து, ஆறுபேரும் தங்களுக்கான விடுதலையை தாங்களே சட்டப்போராட்டம் நடத்தி பெற்றுக்கொள்ள வேண்டுமெனும் நிலைக்கு மாநில அரசு தள்ள நினைத்தால், அது ஒருபோதும் ஏற்புடையதல்ல. தம்பி பேரறிவாளன் கொடுத்தத் தீர்ப்பின் மூலம் இவ்விடுதலை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமை உறுதிபெற்றுள்ள நிலையில், அதனைக்கொண்டு ஆறுபேரையும் விடுதலைசெய்வதற்குரிய வழிவகைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் முதன்மைக் கவனமெடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து, தமிழக ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்து 161-வது சட்டப்பிரிவின்படி இடப்பட்ட சட்டமன்றத் தீர்மானத்துக்கு ஒப்புதலைப் பெற வேண்டுமெனவும், அக்கா நளினி, தம்பி ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஏற்கனவே தொடர் விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் எஞ்சியவர்களான தம்பிகள் ராபர்ட் பயஸ், முருகன், சாந்தன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வருக்கும் நீண்ட நெடிய சிறை விடுப்பு வழங்க முன்வர வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT