Published : 10 Jun 2022 01:06 PM
Last Updated : 10 Jun 2022 01:06 PM
மதுரை: மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக உள்கட்சி தேர்தல் தொடர்பாக கட்சியினர், முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த புகார் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விசாரணை நடத்தியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
திமுகவில் உள்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுகவில் 18 ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்தலில் கடந்த ஜூன் 6-ம் தேதி மனுத்தாக்கல் நடந்தது. ஏற்கெனவே 9 ஒன்றியங்களாக இருந்த நிலையில் 18 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டது.
தற்போதுள்ள ஒன்றிய செயலாளர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டதும், இதற்காகவே பல்வேறு குழப்பங்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே கட்சி தலைமையின் பிரதிநிதி குத்தாலம் அன்பழகனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஒரு ஒன்றியத்திற்கு 5 முதல் 10 மனுக்கள் வரையில் பெறப்பட்டதால் மேலிட பிரதிநிதியே அதிர்ச்சியடைந்தார். கட்சியின் மூத்த நிர்வாகிகள், தற்போதுள்ள ஒன்றியங்களின் செயலாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து 8 ஒன்றிய செயலாளர்கள் கடந்த ஜூன் 7-ம் தேதி மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் மனு அளித்தனர்.
இந்த மனு தொடர்பாக உடனே விசாரணை நடத்தும்படி அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு முதல்வர் உத்தரவிட்டார். இதன் பேரில் நேற்று முன்தினம் புகார் அளித்த 8 ஒன்றிய செயலாளர்களும் சென்னைக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இது குறித்து கட்சியினர் தெரிவித்தது: ஒன்றியங்கள் பிரிப்பதில் பாகுபாடு இருந்தது.
ஒரு ஒன்றியத்தில் 10 ஆயிரம் வாக்குகள், மற்றொரு ஒன்றியத்தில் 48 ஆயிரம் வாக்குகள், ஒரு ஒன்றியத்தில் 3 கவுன்சிலர்கள், மற்றொன்றில் 9 கவுன்சிலர்கள், ஒரு ஒன்றியத்தில் பெரும்பாலும் ஒரே சமூகத்தினர், மற்றொன்றில் தலைகீழ் மாற்றம், நடுவில் உள்ள ஒரு கிராமம் மட்டும் வேறு ஒன்றியத்தில் இணைப்பு என பிரிக்கப்பட்டதில் நடந்த தவறுகளை படங்களுடன் விளக்கினோம்.
இது குறித்து மாவட்ட செயலாளர் எம்.மணிமாறனிடம் கேட்டும் நிவாரணம் கிடைக்கவில்லை என தொடர்ந்து நடந்துவரும் பல்வேறு நிகழ்வுகளை குற்றச்சாட்டாக தெரிவித்தோம். தற்போது மேலிட பிரதிநிதி கட்சியினர் தாக்கல் செய்த மனுக்களுடன் சென்னை வருமாறு சென்னை அழைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வருக்கு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
இதற்கிடையே, கட்சியினர் தெரிவித்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என பதிவு செய்யும் முயற்சியில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தீவிரம் காட்டி வருகிறார். மற்ற மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர் தேர்வு பெரும்பாலும் சுமூகமாக முடிந்த நிலையில், தெற்கு மாவட்டத்தில் மட்டும் விசாரணை நடந்து வருவதால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT