Published : 10 Jun 2022 10:43 AM
Last Updated : 10 Jun 2022 10:43 AM
சேலம்: தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது என ஏற்காட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த நாவலூர் கிராமத்தில் நேற்று நடந்த மலைக்கிராம மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல் உள்ளிட்ட 14 விளை பொருளுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி இருப்பது விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நெல்லுக்கு மட்டும் கடந்த 8 ஆண்டுகளில் 58 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விலையை உயர்த்தி விவசாயிகளின் பாதுகாவலராக பிரதமர் மோடி திகழ்கிறார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுத்துபூர்வமாக உறுதி அளித்துள்ளோம். தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்டிவிட முடியாது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் கோயில்களை வரக்கூடாது என்றுதான் மதுரை ஆதீனம் கூறினார். முதல்வரையோ, அமைச்சரையோ அவர் விமர்சித்து பேசவில்லை. தனது கருத்தை சொல்ல ஆதீனத்துக்கு முழு உரிமை இருக்கிறது. எதுவும் சொல்லக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறுவதை ஏற்க முடியாது.
தமிழக அமைச்சர்கள் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, தகுந்த ஆதாரங்கள் உள்ளன. குற்றச்சாட்டின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்பது பாஜகவின் கருத்து.
தமிழகத்தில் யார் பிரதான எதிர்க்கட்சி என்பது முக்கியம் கிடையாது. இது மக்கள்தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஊழல் குறித்து முதல் பட்டியலை வெளியிட்டேன். உடனே வழக்கு தொடர்ந்தால் நான் பயந்து விடுவேன் என திமுக தப்புக் கணக்குப் போட்டது. அடுத்த பட்டியலை 10 மடங்கு அதிகமாக வெளியிடுவோம்” என்று அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், கோட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் சேலம் மரவனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT