Published : 10 Jun 2022 10:09 AM
Last Updated : 10 Jun 2022 10:09 AM
கடலூர்: தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கைகளை வெளியிடும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அதை நிரூபிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இரண்டாயிரம் ஏக்கர் விவசாயிகளிடம் இருந்து நிலம் எடுக்கப்பட்டு உரிய தொகை வழங்கப்படவில்லை. உரிய தொகை வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் சகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி முழு தொகை மற்றும் மழை வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லையன்று மாநில அரசு சொல்கிறது, மத்திய அரசு நிதி அளித்ததாக கூறுகிறது, இவ்விஷயத்தில், தமிழக எம்பிக்கள் டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் ஆய்வு செய்ய அனுமதித்திருக்க வேண்டும். மடியில் கனம் இல்லையெனில் வழியில் பயம் இல்லை.
பாஜக தலைவர் அண்ணாமலை எதையும் நிரூபிக்காமல் செய்தியாக்கும் வகையில் அறிக்கைளை வெளியிட்டு, தமிழக அரசின் மீது தினம் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதை அவர் நிரூபிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. சில இடங்களில் ரெய்டு நடத்துகின்றனர். ஆனால் ஏதும் வெளியில் வருவதில்லை.
தேமுதிக கட்சி நிர்வாகியளின் தேர்தல் நடைபெற்ற பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் நடைபெறும்” என்றார்.
பேட்டியின்போது, விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தேமுதிய இளைஞரணி செயலாளரும், ஸ்ரீ சாய் கொளஞ்சியப்பர் சமுக நல அறக்கட்டளை தலைவருமான ஆதாரம் பார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் கெடிலம் ஆற்றில் உயிரிழந்த சிறுமிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT