Published : 09 Jun 2022 07:05 PM
Last Updated : 09 Jun 2022 07:05 PM
“இன்றைக்கு காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாத காரணத்தினால்தான் ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தத்தை மக்கள் பார்க்கின்றனர்; விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் ஒரு காலத்திலும் தமிழகத்தில் வெற்றி பெற்றதே கிடையாது; இங்கு வழிகிடைக்கும் என்று பார்க்கிறார் அண்ணாமலை...” - இவ்வாறாக பல கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. இந்து தமிழ் திசை-க்கு அவர் அளித்த வீடியோ நேர்காணலில் இருந்து 10 ‘நறுக்’ பகுதிகள்...
விலகிய கபில் சிபல் குறித்து...
“யார் தலைவர்கள், யார் மாட்சிமை மிக்கவர்கள், பேராண்மை மிக்கவர்கள் என்றால், ஒரு தலைமைக்கோ, இயக்கத்திற்கோ சிரமம் வருகின்றபோது, யார் உடன் நிற்கிறார்களோ, அவர்கள்தான் சிறந்தவர்கள். அதிகாரத்தில் இருக்கும்போது இவர்கள் போல் உண்டா என பேசுகின்றனர். அதிகாரத்தில் இல்லாதபோது தலைமையை விமர்சிக்கின்றனர்.”
ஆர்எஸ்எஸ் பற்றி...
“இன்றைக்கு காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாத காரணத்தினால்தான் ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தத்தை மக்கள் பார்க்கின்றனர். மக்கள் பார்த்து அதை புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் மகாத்மா காந்தி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்து ஒரு கடுமையான போராட்டத்தை நடத்தினார். அந்தப் போராட்டத்தை கடவுளின் பெயராலேயே நடத்தினார்.”
2024 மக்களவைத் தேர்தலுக்குத் தயாரா?
“காங்கிரஸ் பலமடைந்து வருகிறது. எங்கள் சித்தாந்தங்களை மக்களிடம் இன்னும் வேகமாக கொண்டு போகிறோம். இயக்கத்தில் உள்ள கழிசடைகள் எல்லாம் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பவாதிகளை வெளியேற்றுகிறோம், அல்லது அவர்களே வெளியேறுகின்றனர்.
ரத்தினங்களாக இருப்பவர்கள், நட்சத்திரங்களாக இருப்பவர்கள், இயக்கத்தின் மீது பற்றுடையவர்கள், சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையுடையவர்கள் மட்டுமே இப்போது நாங்கள் மேல்நோக்கி கொண்டு வந்துகொண்டிருக்கிறோம். இயக்கம் நன்றாக இருக்கிறது. 2024 தேர்தலில் ஒரு கடுமையான போட்டியை எங்களால் கொடுக்க முடியும், வெற்றியை ஈட்ட முடியும்.
ஒரு கொள்கை என்று ஏற்றுக்கொண்டால், அந்தக் கொள்கையில் நாம் நிற்க வேண்டும். அந்தக் கொள்கைக்கு பலவீனம் வந்தாலும், பலம் வந்தாலும் அதை தாங்கிப் பிடிப்பவன்தான் பேராண்மை மிக்கவன். வரலாறு அவர்களைத்தான் போற்றியிருக்கிறது. இவர்களை எல்லாம் வரலாறு ஏற்றுக்கொண்டதே கிடையாது.”
பேரறிவாளன் விடுதலை குறித்து...
“கொலைக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில், நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டனர். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கருத்தோட்டத்தில் நான் ஒத்துப்போறேன். எனக்கு அதில் மாற்றுக் கருத்து இல்லை.”
பிறகு ஏன் அந்தப் போராட்டம்?
சட்டம் என்பது, விதிகள் என்பது ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பொதுவானது. பேரறிவாளனுக்கு இது பொருந்தும் என்று சொன்னால், ஏன் கோயம்புத்தூர் சிறையிலிருக்கிற இஸ்லாமிய குற்றவாளிகளுக்கு இது பொருந்தாது?
கே.எஸ்.அழகிரியின் நேர்காணல் - பகுதி 1 இங்கே...
பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னவர்களின் அந்த குறுகிய மனபான்மைதான் பேரறிவாளனுக்கு பிரச்சினையையே கொடுத்திருக்கிறது. இல்லையென்றால், பேரறிவாளன் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே வெளியே வந்திருப்பார். ஒரு தரப்பு அவரை விடுதலை செய்யுங்கள் என்றுகூறும்போது, சட்டம், காவல்துறை மற்ற தரப்பு ஏன் அவருக்காக மட்டும் இவர்கள் போராடுகின்றனர் என்றுசொல்லி அவரது விடுதலை தள்ளிபோனது.”
6 பேர் விடுதலை விவகாரம் பற்றி...
“காங்கிரஸ் கட்சி அதில் தலையிடாது. 6 பேர் மட்டுமல்ல 600 பேரை விடுதலை செய்தாலும் எங்களுக்கு அதைப்பற்றி ஆட்சேபனை இல்லை. நாங்கள் ஒரு சித்தாந்த ரீதியாக, ஒரு கொள்கை ரீதியாக அந்த பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறோம். எங்கள் கருத்துக்கு மாறாக செயல்படுகிறவர்களுக்கு எந்த சித்தாந்தமும் இல்லை, மனிதாபிமானமும் இல்லை.”
சீமானின் அரசியல் அணுகுமுறை எப்படி?
“விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் ஒரு காலத்திலும் தமிழகத்தில் வெற்றி பெற்றதே கிடையாது. விடுதலைப் புலிகள், பிரபாகரன், பேரறிவாளனுக்கு ஆதரவாக பேசினால் தமிழக மக்கள் ஆதரிப்பார்கள், அதன்மூலமாக உயர்ந்த இடத்துக்கு வரலாம் என்ற எண்ணத்தை அனைவருமே விட்டுவிட வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஆதரவாக பேசிய எந்த அரசியல் கட்சியும், தலைவரும் தமிழகத்தில் வெற்றி பெற்றது கிடையாது.”
திமுகவுடன் கூட்டணி குறித்து...
“இந்தக் கூட்டணி என்பது 15 ஆண்டு காலமாக இருக்கிறது. 15 ஆண்டு காலமாக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரிய கட்சிகள்தான். 15 ஆண்டுகளாக அந்தக் கூட்டணியில் இருந்த நாங்களும் விடுதலை செய்யக் கூடாது என்று சொன்ன கட்சிதான். இது ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி, ஏதோ முந்தாநாள் ஆரம்பித்த கூட்டணி இல்லை. ”
பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம்?
“இன்னொரு கட்சி ஜெயிக்கவே கூடாது என்று சொன்னால், அதுவே ஒரு சர்வாதிகார உணர்வு. பாஜக எப்படி ஜெயித்தது என்று கேட்பது ஒரு சர்வாதிகார உணர்வு. ஜனநாயக நாட்டில் அவர்கள் ஒரு கடை விரித்துள்ளனர். இப்போது அந்தக் கடையை நோக்கி ஜனங்கள் போய்க்கொண்டுள்ளனர். அப்படியென்றால், எங்கக் கடையில் ஏதோ பொருள் குறைந்துள்ளது என்று அர்த்தம்.”
அண்ணாமலையின் நகர்வுகள் பற்றி...
“சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளுக்காக இந்தக் கூட்டணியை ஏன் உடைக்கவில்லை என்பதுதான் பாஜகவின் கேள்வி. அண்ணாமலையின் ஆசை, ஏதாவது ஒரு காரணம்காட்டி காங்கிரஸும், திமுகவும் பிரிந்துவிட்டது என்றால் அவர்களுக்கு இங்கு வழிகிடைக்கும். நாங்கள் அதற்கு எப்போதும் அந்த அனுமதியை வழங்க மாட்டோம்.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT