Published : 09 Jun 2022 06:41 PM
Last Updated : 09 Jun 2022 06:41 PM
சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், "இந்தியாவில் இன்று 40 விழுக்காடு கரோனா தொற்று அதிகரித்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் குறைவாக இருந்த நிலையில், சற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 195 என பதிவாகியுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது.
BA4, BA5 வகை உறுமாறிய கரோனா தொற்று புதிதாக பதிவாவது, 5வது அலை தொடங்கியது என்பதனை காட்டுகிறது. தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முகக்கவசம் அணிவது தேவை இல்லை என பலரும் நினைக்கிறார்கள்.
அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பாசிட்டிவ் என்று வந்தாலும் கவலை இல்லை. மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது பலரும் வீட்டுத் தனிமையில் தான் உள்ளனர். பரிசோதனை செய்யாமல் பிறருக்கு தொற்றை பரப்பிவிட வேண்டாம்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். செலுத்தாத நபர்களுக்காக, 12-ம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் முகாம்கள் நடைபெறவுள்ளது. அதனை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT