Published : 10 May 2016 01:58 PM
Last Updated : 10 May 2016 01:58 PM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கேஸ் சிலிண்டர் சமையலால் விபத்து அபாயம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் பைப் லைன்கள் செல்லும் அருகில் செயல்படும் ஹோட்டலில் கேஸ் சிலிண்டர்களை வைத்து உணவுப் பொருட்களை சமைப்பதால் தீ விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள், உறவினர்கள், பார்வையாளர்கள் என 4 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இவர்களை குறி வைத்து தண்ணீர் முதற்கொண்டு தேநீர், சாப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் வரை விற்பதற்காக அரசு மருத்துவமனை பகுதிகள், வளாகங்கள் வியாபார தலமாக மாறி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் 9 ஆயிரம் வெளி நோயாளிகள், 2,500 உள் நோயாளிகள், அவர்களுடன் இருக்கும் உறவினர்கள், பார்வையாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.

இந்திய மருத்துவக் கழக விதிமுறைப்படி, மருத்துவமனையில் பணியாளர்களுக்கு ஒரு கேண்டீனும், நோயாளிகளுக்கு ஒரு கேண்டீனும் செயல்பட அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதியும், முறையான டெண்டர் விட்டு கேண்டீன் நடத்த உரிமம் வழங்கப்படும். மதுரை அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம், தனியார் ஹோட்டல், அரசு மருத்துவர்கள், பணியாளர்களுக்கான கேண்டீன்கள் செயல்படுகின்றன. மருத்துவமனை தனியார் ஹோட்டல், கேண்டீனில் சுகாதாரமற்ற முறையில் லாபநோக்கில் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் சமைத்து விற்பனை செய்வதாகவும், அதனால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் பைப் லைன்கள் செல்லும் அருகில் செயல்படும் ஹோட்டலில் கேஸ் சிலிண்டர்களை வைத்து சமைப்பதால் தீ விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சுகாதார உரிமை சமூகச் செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜ் கூறியதாவது: தமிழக அரசின் மக்கள் நல் வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியிட்ட ஒரு அரசாணையில் அரசு மருத்துவமனையில் அங்கீகாரமில்லாத தனியார் கேண்டீன்கள் செயல்பட்டு வந்தால் 3 மாதம் கால அவகாசத்துக்குள் கட்டாயம் அப்புறப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறை எந்த அரசு மருத்துவமனையிலும் பின்பற்றப்படுவதில்லை.

மருத்துவமனை வளாகங்களில் நடத்தப்படும் கேண்டீன்கள், சுத்தமாக பராமரிக்கப்படுவதோடு, குறைந்த விலையில் தரமான உணவுகளை வழங்க வேண்டும். அவற்றின் விலைப்பட்டியல் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வைக்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களை வெளியே சமைத்துக் கொண்டு வந்து விற்க வேண்டும். ஆனால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடத்தப்படும் கேண்டீன்கள், ஹோட்டல்கள் இதை சரியாக பின்பற்றவில்லை. தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனையால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இங்குள்ள தனியார் ஹோட்டல், கேண்டீன்களில் கேஸ் சிலின்டரை வைத்து உணவு சமைக்கப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் ஹோட்டல் செயல்படுவதற்கு அருகே தரைக்கு கீழே நோயாளிகள் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் பைப் லைன்கள் செல்கின்றன. மருத்துவமனை வளாகத்தில் கேஸ் சிலிண்டர், நெருப்பு சம்பந்தமான செயல்பாடுகள் இருப்பதால் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் பைப் லைன்கள் சேதமடைந்தாலோ, துவாரம் ஏற்பட்டாலோ விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர், பிரேதப் பரிசோதனை அறைகள் உள்ளிட்ட அனைத்து வார்டுகளுக்கும் வழங்கப்படும் தண்ணீர், கேன்டீன்கள், இங்குள்ள ஹோட்டல், கேண்டீன்களுக்கு வழங்கப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்துகிறது. இதனால், மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மருத்துவமனையில் கேஸ் சிலிண்டரை வைத்து சமைக்கக் கூடாது. பாதுகாப்புக்காக வெளியில் இருந்து சமைத்து வந்து உணவுகளை வழங்க அறிவுறுத்தி உள்ளோம். அதையும் மீறி கேஸ் சிலிண்டரை வைத்து சமைப்பதால், எந்த நேரமும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் ஹோட்டல் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மத்திய மருந்து வழங்குமிட கவுண்ட்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x