Published : 09 Jun 2022 01:06 PM
Last Updated : 09 Jun 2022 01:06 PM

ஆதீன விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவது தவறான போக்கு: ஈபிஎஸ்

சேலம்: "தமிழகத்தில் திமுகவும் ஆட்சியிலிருந்தது, அதிமுகவும் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இந்த ஆதீன விவகாரங்களுக்குள் யாரும் நுழையவில்லை. இன்றைய ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதி செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன், இது ஒரு தவறான போக்கு" என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஒமலூரில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னையில் வரும் 23-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஆன்லைன் சூதாட்டத்தில் கலந்துகொண்ட பலர், தங்களது சொத்துக்களை இழந்து, விலைமதிக்க முடியாத உயிரைவும் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்த வாரத்தில்கூட இரண்டுபேர் இறந்துள்ளனர். இது ஒரு துயரமான சம்பவம்.

நான் பலமுறை இந்த அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன். எனவே, ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டத்தை இயற்றி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாடத்தை தடை செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தமிழக அரசு மூடியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி படிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை குழந்தைகள்தான் படிக்கின்றனர். அப்படியொரு வாய்ப்பை அதிமுக அரசு உருவாக்கி தந்தது. அந்த வகுப்புகளை தமிழக அரசு மூடியிருப்பது, கண்டிக்கத்தக்கது, வருந்ததக்கது.

தமிழகத்தில் கந்துவட்டி மிகப்பெரிய கொடுமை. ஒரு ஆயுதப்படை காவலரே, கந்துவட்டி வாங்கி இறந்திருக்கிறார் என்று சொன்னால், கந்துவட்டியை தடை செய்ய இயலாத ஒரு அரசாகத்தான் தமிழக அரசை பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுகவும் ஆட்சியிலிருந்தது, அதிமுகவும் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இந்த ஆதீன விவகாரங்களுக்குள் யாரும் நுழையவில்லை. இன்றைய ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதிச் செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஆனால், இன்று எந்த மதமாக இருந்தாலும், எந்த திருக்கோயில்களாக இருந்தாலும், அந்தந்த ஐதீகத்தின்படி வழிபாடு நடைபெற வேண்டும், அதுதான் முறை. அதுதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, ஏதேதோ தவறான வழிகளில், யாருடைய பேச்சைக் கேட்டு செயல்படுகின்றனர். இதுவொரு தவறான போக்கு என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x