Published : 09 Jun 2022 01:41 PM
Last Updated : 09 Jun 2022 01:41 PM
சென்னை: பள்ளிக்கல்வியை அரசுப் பள்ளிகளில் துவங்க வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படும் எனும் அறிவிப்பு ஒரு பேரிடி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து இன்று அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஆட்சி மாறினாலும் தொடர்ச்சியாக குழப்பத்தில் இருக்கும் பள்ளிக்கல்வித் துறையின் சமீபத்திய அறிவிப்பான, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படும் எனும் அறிவிப்பு கல்வியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிர்ச்சி தருகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதற்கு பல காரணங்களில் ஒன்றாக ஆங்கில வழிக் கல்வி இல்லாததும், எல்கேஜி, யுகேஜி இல்லாததும் முக்கியமான ஒன்றாக கல்வியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை மாற்றும் பொருட்டு அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019ல் தொடங்கப்பட்டன. 3-4 வயது குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கரோனாவிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்ததாக தரவுகள் சொல்கின்றன.
இரண்டு ஆண்டுகள் கரோனாவால் சேர்க்கை நடக்காமல் இருக்க, நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சேர்க்கை மீண்டும் துவங்கும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் எதிர்பார்த்திருந்த வேளையில் அவை மூடப்படுவதாக தகவல் வெளியாகியிருப்பது யாருக்காக இந்த அரசு செயல்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதற்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வந்த ஆசிரியர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்குப் பாடம் எடுக்க மாற்றப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் உண்மையாக இருந்தால், ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து ஏற்கனவே பணிக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கி இருக்க வேண்டுமே ஒழிய, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என்று அறிவிப்பது முரணாக இல்லையா? எல்கேஜி யுகேஜியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் இனி நேரடியாக தனியார் பள்ளிகள் நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை தள்ளியுள்ளது கண்டனத்திற்குரியது.
இது குறித்து கேள்வி எழுப்பிய பின், அங்கன்வாடி மையங்களுக்கு இந்தக் குழந்தைகள் செல்லலாம் என்றும், மழலையர் வகுப்புகள் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளிக்கிறார். ஆனால் சமூகநலத்துறை அதிகாரிகளோ, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி பாடங்கள் கற்றுத் தரப்படாது. ஏற்கெனவே இருந்த அடிப்படைக் கல்வித் திட்டமே செயல்படுத்தப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளை பராமரித்து பாடங்களை எடுப்பார்கள் என்று கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அங்கன்வாடி மையங்களில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு தெரியவில்லை என்று புரிகிறது. பல அங்கன்வாடி மையங்களில் சத்துணவு உதவியாளரின் இடங்கள் காலியாக உள்ளன. ஒரே ஒரு சத்துணவு அமைப்பாளர் அங்கு தினம் வரும் 2 வயது முதல் 5 வயது வரையிலான சுமார் 30 குழந்தைகளை கவனித்துக் கொண்டு அவர்களுக்கு உணவு சமைத்து, பரிமாறி குழந்தைகளின் எல்லாத் தேவைகளையும் காலை முதல் மாலை வரை கவனித்துக்கொள்கிறார். இதற்கிடையில் அவர்களுக்கு எல்கேஜி யுகேஜி வகுப்பு எடுப்பது என்பது எவ்வாறு நடக்கும் என்பது புரியவில்லை.
இவ்வகுப்புகள் எடுப்பதற்காக அங்கன்வாடியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது குறித்தான திட்டம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆகமொத்தத்தில், எல்கேஜி, யுகேஜி தொடர்பான அறிவிப்பு, குழப்பம் மற்றும் அலட்சியத்தின் உச்சம் என்பது மட்டும் உறுதி.
இச்சமயத்தில் தங்களின் கோரிக்கைகளுக்காக அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருவதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஒரே அறையில் மட்டும் செயல்படும் அங்கன்வாடிகளில் இருக்கும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் எல்கேஜி வகுப்பு, யுகேஜி வகுப்பு எவ்வாறு பிரிக்கப்பட போகிறது? இன்று அங்கன்வாடி வரும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சீருடை முதற்கொண்டு மோசமாக உள்ளது.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒரு கைபேசி வழங்கப்பட்டு அன்றாடம் செய்யும் வேலைகளை அவர்கள் அவ்வப்போது அந்த கைபேசியில் பதிவேற்றம் செய்து அனுப்ப வேண்டும். 3 வருடத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அந்த கைபேசியில் இருக்கும் சிக்கல்களைக் கலைவதற்கு சமூக நலத்துறையால் இன்றுவரை நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால், ரிப்போர்ட மட்டும் விரைவாக தர வேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையெல்லாம் விட சமூக நலத்துறையின் முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிகர் ஐஏஎஸ் அவர்கள் சென்ற ஆண்டே, தமிழகத்தில் இருக்கும் 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் சுமார் 7000 மையங்கள் மிக மோசமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். அபாயகரமான இந்த விவகாரத்திற்கே இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பள்ளிக்கல்வியை அரசுப் பள்ளிகளில் துவங்க வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த அறிவிப்பு ஒரு பேரிடி. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று முறையாக பள்ளி மாணவர்களுக்கான எல்கேஜி, யுகேஜி வகுப்பை நடத்த வேண்டும்,
அதற்குரியவாறு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அதேசமயம் அங்கன்வாடி மையங்களில் இருக்கும் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது." என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT