Published : 09 Jun 2022 11:03 AM
Last Updated : 09 Jun 2022 11:03 AM
சென்னை: மத்திய அரசு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையையும், தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையையும் சற்று உயர்த்தி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "2022ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தியுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2040, சன்ன ரக நெல்லுக்கு ரூ.2060 விலை கிடைக்கும். மாநில அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்தால் முறையே ரூ. 2115, ரூ.2160 கிடைக்கும். இது போதுமானதல்ல.
2021ம் ஆண்டில் நெல் கொள்முதல் விலையை ரூ.72 மட்டுமே மத்திய அரசு உயர்த்திய நிலையில், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 100 கொள்முதல் விலை உயர்வு சற்று அதிகம் தான். ஆனால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க இந்த விலை எந்த வகையிலும் பயனளிக்காது.
நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1986-ஆக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50% ரூ.993 லாபம் சேர்த்து குவிண்டாலுக்கு ரூ.2979 கொள்முதல் விலை நிர்ணயிப்பது தான் உழவர்களுக்கு ஓரளவாவது லாபத்தை உறுதி செய்யும்.
மத்திய அரசு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையையும், தமிழக அரசு அதன் ஊக்கத் தொகையையும் சற்று உயர்த்தி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கொள்முதல் விலை வழங்க முன்வர வேண்டும். அப்போது தான் உழவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT