Published : 14 May 2016 03:01 PM
Last Updated : 14 May 2016 03:01 PM
அதிமுக ஆட்சியில்தான் ராயபுரம் குடிசைகள் இல்லாத பகுதியாக மாறியிருப்பதாக அத்தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
'தி இந்து' தமிழ் ஆன்லைனுக்கு அவர் அளித்த பேட்டியின் முழு விவரம்:
ராயபுரம் தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறீர்கள். 4 முறை வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்கள் தொடர் வெற்றிக்கு தனிப்பட்ட செல்வாக்கு காரணமா?
ராயபுரம் தொகுதியில் தொடர் வெற்றிக்கு காரணம் தமிழக முதல்வரின் நல்ல திட்டங்கள். பல்வேறு தொலைநோக்கு பார்வை கொண்ட நலத்திட்டங்களை முதல்வர் மக்களுக்கு அளித்திருக்கிறார். தமிழக பட்ஜெட்டில் ஏழை, எளிய மீனவர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், நெசவாளர்கள் சமூக பொருளாதார கல்வி ரீதியாக ஏற்றம் பெற பல திட்டங்களை அறிவித்திருக்கிறார். அவரது நலத்திட்டங்களால் மக்கள் பயனுடைந்துள்ளனர். எல்லா வெற்றிக்கும் காரணம் முதல்வரின் நலத்திட்டங்களே.
இந்த முறை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பலமுனைப் போட்டி நிலவுகிறது. 4 முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு மூத்த அரசியல்வாதியாக உங்கள் பார்வை என்ன?
செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு அல்ல. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த தீர்மானம் மாநிலத்தின் நிரந்தர முதல்வராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்பதே. அதனால் எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. மக்களின் எண்ணமும், உணர்வும் தமிழகத்தை ஜெயலலிதா ஆள வேண்டும் என்பதே. எனவே வெற்றி எங்களுடையதே.
இதற்குக் காரணம் கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதை அத்தனையும் முதல்வர் நிறைவேற்றினார். உதாரணத்துக்கு எனது தொகுதிக்கு உட்பட்ட பார்த்தசாரதி நகரில் உள்ள 140 வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால், முதல்வர் சீரமைப்பதற்கு பதிலாக புதிதாகவே வீடு கட்டிக் கொடுக்கலாம் என்றார். அதன்படி புதிதாக ரூ.12 கோடி செலவில் பார்த்தசாரதி நகர் மக்களுக்கு வீடு கட்டித் தரப்பட்டுள்ளது.
ராயபுரம் தொகுதிக்கான உங்கள் திட்டங்கள் என்னென்ன?
ராயபுரம் பகுதியின் நீண்ட கால பிரச்சினைகளாக இருந்த மழைநீர் தேக்கம், கழிவுநீர் பிரச்சினை, சாலை வசதியின்மை, மின்சாரம், குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் மாசு, போக்குவரத்து நெரிசல் ஆகியனவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில்தான் ராயபுரம் குடிசைகள் இல்லாத பகுதியாக மாறியிருக்கிறது.
அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், பழைய ராயபுரம் 9 வட்டத்திலும் தண்ணீர் நிற்கவில்லை, மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.
ராயபுரம் தொகுதியில் உள்ள 535 தெருக்களில் 2 அல்லது 3 தெருக்களைத் தவிர மற்ற அனைத்து தெருக்களில் மழையின் போது சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பகுதிகளிலும் தேர்தலுக்குப் பின்னர் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ராயபுரம் புதிய வட்டங்களான 48, 53-ல் வெள்ள நீர் புகுந்ததற்கு புழல் உபரி நீர் பக்கிங்காம் கால்வாயில் கலந்ததே காரணம். இனி அப்பகுதியில் மழை வெள்ளம் புகாதவாறு தடுப்புச் சுவர் அமைக்கப்படும். தொகுதி முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 12,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. அவற்றில் 10,000 மரங்கள் நன்றாக வளர்ந்துள்ளன. என்னூர் எக்ஸ்பிரஸ்வே சாலைத் திட்டம் 70% முடிந்துவிட்டது. அது விரைவில் முழுமையாக முடிக்கப்படும். ராயபுரம் தொகுதியில் சிறிய பஸ்கள் போக்குவரத்து அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் இயக்கப்படும்.பசுமையான, தூய்மையான, அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்ற ராயபுரம் உருவாக்கப்படும்.
தினம் ஒரு கருத்துக் கணிப்பு வருகிறது. விதவிதமான முடிவுகள் வருகின்றன? கருத்துக் கணிப்புகள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
எத்தனை கருத்துக் கணிப்பு வந்தாலும், மக்களின் கருத்துக் கணிப்பின்படி ஜெயலலிதாவே முதல்வராவார். தமிழ்நாட்டு பிரச்சினைகளை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்பதால் அவரே முதல்வராவார். எனவே மக்களிடம் கருத்துக் கணிப்புகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT