Published : 09 Jun 2022 07:11 AM
Last Updated : 09 Jun 2022 07:11 AM
திருச்சி: திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் ஆங்கில வழி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காட்டூரில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இதில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஏறத்தாழ 800 மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 5 பாடப்பிரிவுகளில் பிளஸ் 1 வகுப்பில் 148 மாணவிகளும், பிளஸ் 2 வகுப்பில் 130 மாணவிகளும் தமிழ்வழியில் இந்த ஆண்டு தேர்வெழுதியுள்ளனர்.
இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மேல்நிலைக் கல்வியில் ஆங்கில வழி பாடப்பிரிவு இல்லாத நிலை உள்ளது. இதனால், இந்த பள்ளியிலேயே 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழிப் பாடப்பிரிவில் படித்த மாணவிகள் தொடர்ந்து ஆங்கில வழியில் படிக்க வேறு பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இதே பள்ளியில் மேல்நிலை வகுப்பில் ஆங்கில வழி பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து விமன் இந்தியா மூவ்மென்ட் அமைப்பின் மாவட்டத் தலைவர் நூ.மூபினா பேகம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இந்த பள்ளியில் 2014-ம் ஆண்டு தொடங்கி இரு ஆண்டுகள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் ஆங்கில வழிப் பாடப்பிரிவின் கீழ் நடத்தப்பட்டன. அதன் பிறகு ஆங்கில வழி பாடப் பிரிவு நீக்கப்பட்டு விட்டது.
இதன் காரணமாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடத் திட்டத்தில் படிக்க விரும்பும் மாணவிகள் வேறு பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பில் ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பள்ளி வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் கூறியது: மேல்நிலை வகுப்புகளை நடத்துவதற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 9 பேர் உள்ளனர். இவர்களுக்கு பள்ளியில் தமிழ்வழியில் பாடங்களை எடுக்கவே நேரம் போதுமானதாக உள்ளது. ஏற்கெனவே ஆங்கில வழிப் பாடப்பிரிவுகளையும் இந்த ஆசிரியர்கள் தான் எடுத்து வந்தனர். ஆனால், பணிச்சுமை காரணமாக மாணவிகளை முழுமையாக கவனிக்க இயலாததால் ஆங்கில வழிப் பாடப்பிரிவுகள் கைவிடப்பட்டன.
தற்போது ஆங்கில வழி பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் எனில் கூடுதலாக 6 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதற்கு ஆதிதிராவிடர் நலத் துறைதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர ஆசிரியர்கள் இல்லாதபட்சத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். ஆனால், பிறத் துறைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு இதுபோன்ற ஏற்பாடுகள் கிடையாது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட இந்தப் பள்ளியில் ஆங்கில வழிப் பாடப்பிரிவுக்கு அதிக அளவில் தேவை இருக்கிறது என்பதால் மாணவிகளின் நலன் கருதி வரும் கல்வியாண்டிலேயே பிளஸ் 1 ஆங்கில வழி பாடப்பிரிவை தொடங்கி, மாணவிகளை சேர்க்கவும், தேவையான ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமித்துக் கொள்ளவும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் பேசி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT