Published : 09 Jun 2022 03:53 AM
Last Updated : 09 Jun 2022 03:53 AM
புதுக்கோட்டை: வாக்கு வங்கி இல்லாதவர்களின் வாழ்க்கைக்கும், சேவைக்கும் உதவிகளைச் செய்யும் அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு. இந்த அரசினுடைய நோக்கம் சிந்தனை, செயல் அனைத்தும் சாதாரண மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (புதன் கிழமை) நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், ரூ. 81 கோடியே 31 லட்சம் செலவில் நிறைவுற்றிருந்த 140 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து ரூ.166.84 கோடி மதிப்பீட்டிலான 1,399 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 48 ஆயிரத்து 868 பயனாளிகளுக்கு ரூ.370 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: "நான் புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறேன். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தீட்டப்பட்டிருக்கக் கூடிய திட்டங்களுக்கான உத்தரவுகளை எல்லாம் அந்தக் கோட்டையிலிருந்து பிறப்பித்து, அதை நிறைவேற்றுவதற்காக “புதுக்”கோட்டைக்கு வந்திருக்கிறேன். ஒரு காலத்தில் திருச்சி மாவட்டத்தோடு இருந்தது இந்த புதுக்கோட்டை.
1974-ம் ஆண்டு அதனை பிரித்து, புதுக்கோட்டையை தனி மாவட்டமாக ஆக்கியவர் கருணாநிதி. அப்போது, புதுக்கோட்டை அரண்மனை மாளிகையை விலைக்கு வாங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மாற்றி, அதற்கு ராஜா கோபால தொண்டைமான் மாளிகை என பெயர் சூட்டினார்.
இன்றைக்கு புதுக்கோட்டையில் உள்ள 6 தொகுதிகளில், 5 தொகுதிகளை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வென்று, திமுக அரசின் கோட்டையாக புதுக்கோட்டை மாறியிருக்கிறது. எந்தக் கோட்டையாக இருந்தாலும் அது ஒரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால் எப்போதும் புதிய கோட்டையாகவே இருப்பது, இந்த புதுக்கோட்டை. தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டைக் கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், உள்கட்டமைப்பில் சிறப்புற வளர்த்தவர் கருணாநிதி.. இந்த அடிப்படையில்தான், இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பாதையை டெவலப்மெண்ட் என்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லை. மாற்றம், மேன்மை, உள்ளார்ந்த மலர்ச்சி என்ற பண்பாட்டு அடையாளத்துடன் நாங்கள் சொல்கிறோம்.
ஒரு தொழிற்சாலை உருவாவது வளர்ச்சி. அந்தத் தொழிற்சாலை வருவதன் மூலமாக அந்த வட்டாரம் அடையக்கூடிய பயன், அந்த வட்டாரம் அடையக்கூடிய வேலைவாய்ப்புகள், அதன் மூலமாக அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் அடையக்கூடிய உயரம், சமூகத்தில் ஏற்படும் மாற்றம் ஆகிய அனைத்தையும் சேர்த்துத் தான் வளர்ச்சி என்று சொல்கிறோம்.
அத்தகைய வளர்ச்சியை உருவாக்க நாங்கள் நினைக்கிறோம். இதைத்தான் கம்பீரமாகச் சொல்கிறோம், இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது தான் அதனுடைய உள்ளடக்கம்.
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வது தான் திராவிட மாடல். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால் தேர்தலில் குதித்த திராவிட முன்னேற்றக் கழகம். மக்கள் தான் எங்களுக்கு முக்கியமே தவிர, இப்படிப்பட்ட பதவிகள் அல்ல. எத்தகைய திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதனை வாக்கு வாங்கக் கூடிய தந்திரம் என்று கொச்சைப்படுத்துபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.
வாக்குகளை வாங்குவதற்காகத்தான் இதை எல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று குற்றம் சாட்டக்கூடியவர்கள், விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். நான் கேட்கிறேன், இருளர்களுக்கோ, குறவர்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ, திருநங்கைகளுக்கோ வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறதா? அவர்கள் வாக்கு வங்கி உள்ளவர்களா? இப்படி வாக்கு வங்கி இல்லாதவர்களது வாழ்க்கைக்கும், அவர்களது சேவைக்கும் உதவிகளைச் செய்யும் அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு. இந்த அரசினுடைய நோக்கம் சிந்தனை, செயல் ஆகிய அனைத்தும் மக்கள் நலன்தான், சாதாரண மக்களின் நலன்தான், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்தான்.
தன்னுடைய வாழ்நாள் முழுக்க கடைசி நாள்வரை, கடைசி நொடிவரை வாளியைச் சுமந்துக் கொண்டு, பகுத்தறிவை ஊட்டி எந்த மக்களின் சுயமரியாதைக்காக தந்தை பெரியார் பாடுபட்டாரோ, உலக அரசியலை எல்லாம் எடுத்துச் சொல்லி, அரசியல் எழுச்சியையும், தமிழ் உணர்வையும் அண்ணா எந்த மக்களுக்காக உணர்வு ஊட்டினாரோ, சமூகநீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட கருணாநிதி எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, அந்த மக்களின் அரசு தான் இன்று கோட்டையில் நடக்கிறது. அந்த மக்களுக்கான அரசையே தொடர்ந்து நடத்துவோம் என்பதை இங்கு உங்கள் முன்னால் நின்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் இங்கேயும் குறிப்பிட விரும்புகிறேன்" என்று முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment