Published : 09 Jun 2022 01:32 AM
Last Updated : 09 Jun 2022 01:32 AM
ஈரோடு: அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்களும், சசிகலாவும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடந்த அமமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "தமிழகத்தில் ஓராண்டு திமுக ஆட்சி ஏமாற்றமளிக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், திராவிடர்கள் தலைகுனியும் வகையில், மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சியில் காவல்துறையில் தலையீடு அதிகம் இருக்கிறது. ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக இன்னும் திருந்தவில்லை. மக்கள் அதற்கான தண்டனையைக் கொடுப்பார்கள்.
எதிர்கட்சிகளில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்று எதுவும் இல்லை. ஆளுங்கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், எதிர்கட்சிகள் போராடும். தங்கள் மடியில் கனமிருப்பதால், திமுக ஆட்சியின் குறைகள் குறித்து அதிமுகவினர் பேச மாட்டார்கள்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ள வேண்டும். அவை பொய் என்றால், வழக்கு தொடர வேண்டும். எட்டு ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் நிறை, குறைகள் கலந்தே உள்ளன.
அதிமுகவை மீட்க வேண்டும், ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். இதே நோக்கத்திற்காக சசிகலா, சட்டரீதியாகப் போராடுகிறார். நாங்கள் ஜனநாயக ரீதியாகப் போராடுகிறோம். எங்கள் இருவரின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும், பாதைகள் வேறாக உள்ளன" என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது, முன்னாள் எம்எல்ஏக்கள் சேலஞ்சர் துரை, சண்முகவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT