Last Updated : 08 Jun, 2022 08:17 PM

 

Published : 08 Jun 2022 08:17 PM
Last Updated : 08 Jun 2022 08:17 PM

'“யூடியூப் மீதும் நடவடிக்கை அவசியம்” - சாட்டை துரைமுருகன் வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

உயர் நீதிமன்றம் கிளை, மதுரை.

மதுரை: ''மனிதகுல மேம்பாட்டுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை அழிவுக்கு பயன்படுத்துகிறார்கள்'' என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை திருபனந்தாள் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டபோது, இனிமேல் யாரையும் அவதூறாக பேச மாட்டேன் என சாட்டை துரைமுருகன் உறுதிமொழி கடிதம் வழங்கினார். இதையேற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக துரைமுருகன் கைதானார். இதையடுத்து திருபனந்தாள் வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து, உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறி செயல்பட்டதால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நீதிபதியின் உத்தரவில் கூறியிருப்பதாவது: ''இரண்டாம் உலகப் போரின்போது 1945-ல் ஹிரோஷிமா - நாகசாகியில் அணு குண்டு போட்டபோது, அணு சக்தியை கண்டுபிடித்த டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறும்போது, மனித குலத்தின் மேம்பாட்டுக்காகவே நான் அணு சக்தியை கண்டுபிடித்தேன். அது பேரழிவுக்கு பயன்படுத்தப்படும் என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு எதிர்பார்த்திருந்தால் அணு சக்தியை கண்டுபிடித்திருக்கவே மாட்டேன் என்றார்.

மனித குலத்தின் நலனுக்காகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் வருகின்றன. அந்த கண்டுபிடிப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இணையம் என்பது 21-வது நூற்றாண்டில் அற்புதமான கண்டுபிடிப்பு. இந்த கண்டுபிடிப்பு பலரின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. யூடியூப் என்பது ஆன்லைன் வீடியோ பரிமாற்றம் செய்யப்படும் சமூக வலைதளமாகும். இதனை மாதம் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள். தினமும் நூறு கோடி மணி நேரத்துக்கு மேல் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன.

இந்தியாவில் மட்டும் யூடியூப் 63 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. சாதாரண நபர்கள் கூட தங்களின் அன்றாட செயல்பாடுகள், சிந்தனைகள், பயண அனுபவங்களை யூடியூப்புகளில் பதிவிடுகின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் யூடியூப் வீடியோக்களை பார்த்து சமையல் செய்வதும் நடக்கிறது.

இணையதளத்தை பயன்படுத்தி ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தும் வீடியோ பதிவேற்றம் செய்து ஒருவரை குற்றவாளியாக்க முடியும். இவற்றை கட்டுப்படுத்த 2000ம் ஆண்டில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தில் சமூக வலை தளம் நடத்துவோரை கட்டுப்படுத்த பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் சட்டத்தை அதிகாரிகள் முறையாக அமல்படுத்துவது இல்லை.

துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பது உட்பட பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இந்த வீடியோக்களை பார்க்கும் தற்காலிக தலைமுறை குழந்தைகளின் மனதில் குழப்பம் உருவாகி மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் ஆட்சேபகரமான வீடியோக்களை முடக்குவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், அதற்காக சமூக வலை தளத்தினர் முதல் தகவல் அறிக்கை, நீதிமன்ற உத்தரவு கேட்பதாகவும், வெளிநாட்டிலிருந்து இயங்கும் சமூக வலைதளத்தினர் சைபர் கிரைம் போலீஸாரின் கடிதத்துக்கு பதில் அளிப்பதே இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய நிலப்பரப்பில் இயங்கும் சமூக வலை தளத்தினர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்தான். இந்த சமூக வலை தளத்தினர் பயனர்களுக்கான தனி வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தொடர்பாக யூடியூப் சேனல்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஒப்பந்த விதிகளை மீறும் சேனல்களை உடனடியாக சமூக வலைதளத்திலிருந்து நீக்க வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் தங்களின் கொள்கைகள், வழிகாட்டுதல்கள் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மீறினால் அந்த வீடியோக்களை நீக்க வேண்டும், முடக்க வேண்டும். அதற்காக முதல் தகவல் அறிக்கை, நீதிமன்ற உத்தரவுகளை கேட்கக்கூடாது. தங்களின் கவனத்துக்கு வந்த பிறகும் ஆட்சேபத்துக்குரிய வீடியோக்களை முடக்கம், நீக்கம் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தினர் மீது மத்திய தகவல் தொழில்நுட்ப சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x