Published : 08 Jun 2022 04:10 PM
Last Updated : 08 Jun 2022 04:10 PM
சிவகங்கை: “'தமிழ்ச் சமுதாயத்துக்கு என்னால் முடிந்தவரை உழைத்துவிட்டேன். எனக்குப் பிறகு யார் என்று கேட்டால், தம்பி ஸ்டாலின்தான்' என்று தலைவர் கருணாநிதி ஒரு முறை சொன்னார். அந்த நம்பிக்கையை இந்த ஓராண்டுகாலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். இனியும் தொடர்ந்து நான் காப்பாற்றுவேன். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரையூரில் இன்று (ஜூன் 8) நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "அனைத்துச் சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ, ஒருமித்த கருத்தோடு வாழ முன்னெடுப்பட்டிருக்கக் கூடியது மட்டுமல்ல, இந்தச் சமத்துவபுரங்களில், வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் நீங்கள் வாழ்ந்து, இந்த நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
உங்களைப் பார்த்து அனைவரும் சமத்துவத்தைப் போற்றி, "இந்த நாடே சமத்துவபுரமாகத் திகழ வேண்டும்" என்ற நம்முடைய மறைந்த முதல்வர் கருணாநிதியின் எண்ணத்தை நாம் நினைவாக்க வேண்டும்.
அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும், கடைக்கோடியில் இருக்கக்கூடிய குடிமகனுக்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய லட்சியம், அரசினுடைய நோக்கம். அரசின் திட்டங்களின் பயன் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்று சேர்வதை நம்முடைய அரசு உறுதி செய்யும். இங்கே அமர்ந்துள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் அதனை நாள்தோறும் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்.
சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்ததைவிட, இப்போது அதிகமான அளவு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு எழுச்சி இன்றைக்கு மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. காரணம் என்ன? மக்களுக்கு மிகமிக உண்மையாக இருப்பது, மக்களுக்கு நேர்மையான ஆட்சியை வழங்குவது தான் இதற்கு முக்கியக் காரணம்.
தேர்தலுக்கு முன்னால், எப்படி மக்களைச் சந்தித்து வந்தேனோ, அதைவிட அதிகமாகவே இப்போது நான் மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். மக்களைத் தொடர்ச்சியாகச் சந்திப்பது, ஆட்சியாளர்களின் மிக முக்கியமான இலக்கணமாக நான் கருதுகிறேன்.
அண்மையில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரும், பழுத்த அனுபவம் கொண்ட நாடாளுமன்றவாதியுமான வெங்கையா நாயுடு அண்மையில் அழைத்தது எதற்கு என்றால், மறைந்த முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பதற்காக அழைத்திருந்தோம். அவரும் மகிழ்ச்சியோடு வந்தார், வந்து நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு பங்கேற்றார், மகிழ்ச்சியோடு பேசினார், சிறப்போடு பேசினார்.
எந்தவகையில் எல்லாம் சிறப்பாக மறைந்த தலைவர் கருணாநிதி ஆட்சி நடத்தினார் என்பதை அவர் சுட்டிக் காட்டிப் பெருமைப்படுத்திப் பேசினார். அதோடு நிற்காமல், அவரது வழித்தடத்தில் இப்போதைய முதல்வரும் ஆட்சி நடத்தி வருகிறார் என்று அவர் குறிப்பிட்டது தான் நமக்குப் பெருமை, என்னுடைய வாழ்வில் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பாராட்டாக நான் கருதுகிறேன்.
இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்களை அறிந்த குடியரசுத் துணைத் தலைவர் , என்னையும் பாராட்டியும், தலைவர் கருணாநிதிப் போல திறமையாக ஆட்சி நடத்துகிறேன் என்று ஒப்பிட்டுச் சொன்னது, எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிக மிகப் பெரிய பாராட்டாக நான் கருதுகிறேன்.
தலைவர் கருணாநிதி இருந்த இடத்தை நான் நிரப்பிவிட்டேன் என்று சொல்லவில்லை. அவரது இடத்தை யாராலும், எந்தக் கொம்பனாலும் நிரப்பிட முடியாது. ஆனால் அவரைப் போலச் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஓராண்டுகாலமாக என்னுடைய செயல்பாடு அமைந்துள்ளது. நம்பர் 1, நம்பர் 2, அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. தமிழகம் நம்பர் 1-க்கு வர வேண்டும், அது தான் என்னுடைய லட்சியம். குடியரசுத் துணைத் தலைவரின் பாராட்டு அதனைத்தான் வெளிப்படுத்துகிறது என்று நினைத்து நான் பெருமை அடைகிறேன்.
'தமிழ்ச் சமுதாயத்துக்கு என்னால் முடிந்தவரை உழைத்துவிட்டேன். எனக்குப் பிறகு யார் என்று கேட்டால், தம்பி ஸ்டாலின்தான்' என்று தலைவர் கருணாநிதி ஒரு முறை சொன்னார். அந்த நம்பிக்கையை இந்த ஓராண்டுகாலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். இனியும் தொடர்ந்து நான் காப்பாற்றுவேன். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஐந்து ஆண்டுகளில் செய்யவேண்டியதை இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம். இது ஏதோ ஆரம்ப கட்ட வேகம் என்று நீங்கள் நினைக்கலாம், எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் இதே சுறுசுறுப்புடனும், இதே வேகத்துடனும் தான் நான் இருப்பேன். மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும் தான் என்னை இத்தகைய சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் பணியாற்ற வைக்கிறது. ஒவ்வொருவரும் காட்டும் அன்பிலும் அரவணைப்பிலும் தான் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணும்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்துபட்ட அன்புப் பண்பாட்டைக் கொண்ட இனம் தான் இந்தத் தமிழினம். அந்தத் தமிழினம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழர்களின் தாய்மடியாக விளங்கும் கீழடி இருக்கக்கூடிய மாவட்டம் தான் இந்த சிவகங்கை மாவட்டம்.
அந்த கீழடியின் தொன்மையையும், அதன் மூலமாக தமிழினத்தின் கடந்த காலப் பெருமையையும் மீட்ட அரசுதான் இந்த அரசு. தமிழினத்தின் தொன்மையான பெருமைகளைப் பேசுவோம். அதற்காக அதை மட்டுமே பேசிக் கொண்டு இருந்துவிட மாட்டோம். நிகழ்கால மக்களை அனைத்து வகையிலும் மேன்மை அடைய வைப்போம். அதுதான் திமுக அரசு.
தமிழ்த் தொண்டு,தமிழினத் தொண்டு, தமிழ்நாட்டுத் தொண்டு ஆகிய மூன்றையும் ஒருசேர நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் வளமான வாழ்க்கைக்கு, வளமான தமிழகத்திற்கு வழிவகுப்போம் என்ற உறுதியை நான் இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இங்கே கூட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் , வீரமங்கை வேலு நாச்சியாரை போற்றும் வகையில் சிவகங்கை நகரை தலைமையிடமாகக் கொண்டு, வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவல் பயிற்சிக் கல்லூரி துவங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். நியாயமான கோரிக்கை. ஆனால் நான் சென்னைக்கு இன்று இரவு செல்கிறேன். நாளையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்துபேசி, ஆய்வு நடத்தி, அதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT