Published : 08 Jun 2022 03:32 PM
Last Updated : 08 Jun 2022 03:32 PM
சென்னை: கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை செய்திட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கடலூர், புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதற்காக, ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் .
அந்தச் சுற்றறிக்கையில், "கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள கந்து வட்டி வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் . கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கையெழுத்து வாங்கப்பட்ட வெற்றுக் காகிதங்கள் உள்ளிட்ட சட்ட விரோத ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட உத்தரவுகளை டிஜிபி வழங்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT