Last Updated : 08 Jun, 2022 02:08 PM

 

Published : 08 Jun 2022 02:08 PM
Last Updated : 08 Jun 2022 02:08 PM

ஜிப்மரில் தடையின்றி மருந்து, அலைக்கழிப்பின்றி சிகிச்சை அளிக்காவிட்டால் போராட்டம்: புதுவை திமுக எச்சரிக்கை

புதுச்சேரி: நோயாளிகளுக்கு தடையின்றி மருந்து, அலைக்கழிப்பின்றி சிசிச்சை அளிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று ஜிப்மருக்கு புதுச்சேரி திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தரம் நாளுக்கு, நாள் மிகவும் குறைந்து வருகிறது. இங்கு தலைமை சரியில்லாததால் மக்களுக்கு சிறப்பான சேவையும் கிடைக்காமல் உள்ளது.

மருந்து, மாத்திரைகள், மருத்துவ கருவிகள் வாங்கினால் முறைகேடு நடந்துவிடும் எனக்கூறி அவைகளை வாங்காமல், அதற்காக வழங்கப்படும் நிதியை செலவு செய்யாமல் மத்திய அரசிடமே திருப்பி அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக ஜிப்மர் நிர்வாகத்துக்கு தெரியவந்தால், அதை தடுத்து முறைகேடு இல்லாத வகையில் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர மாறாக அதை வாங்குவதையே நிறுத்தி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது.

தற்போது சிக்கலான நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளே அதிகம் உள்ளனர். புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிர் மருத்துவமனை உள்ளிட்டவைகள் மட்டுமின்றி, புதுச்சேரிக்கு அருகில் உள்ள விழுப்புரம், கடலூர் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறும், சிக்கலான நோய்களை கொண்டுள்ளவர்கள் அங்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்க முடியாததன் காரணமாக மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

புதுச்சேரி திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா | கோப்புப் படம்

முன்பு இதுபோல் அனுப்பப்படும் நோயாளிகளை ஜிப்மர் மருத்துவர்கள் எந்தவித விசாரணையும் மேற்கொண்டு தடை ஏற்படுத்தாமல் சேர்த்து சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் தற்போது சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் அலைகழிப்புக்கு ஆளாகின்றனர். சிலர் இறக்கவும் நேரிடுகின்றது.

மேலும் ஜிப்மரில் நிலவும் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாட்டால் ஏழைகள் மருந்துகளை சரியாக உட்கொண்டு நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் மருந்து, மாத்திரைகளை வெளியில் வாங்கி சாப்பிட்டு குணமாக்கி கொள்ள முடியாததன் காரணமாக இறந்தும் வருகின்றனர்.

இவற்றை சரி செய்து சிறந்த மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கமின்றி ஜிப்மர் இயக்குநர் செயல்பட்டு வருகின்றார். எனவே உடனடியாக மத்திய சுகாதாரத்துறை இவ்விஷயத்தில் தலையிட்டு ஜிப்மருக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் விசாரணைகள் ஏதுமின்றி சேர்த்து சிகிச்சை அளிக்கவும், மருந்து, மாத்திரைகள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக, தொடர்ந்து இதேபோல் ஜிப்மர் தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஏழை நோயாளிகளை பாதிக்கச் செய்யும் வகையில் மருந்து மாத்திரைகள் தடையின்றி வழங்காமலும், சிகிச்சைக்கு வருபவர்களை அலைக்கழிக்கவும் செய்தால் திமுக மக்களை திரட்டி ஜிப்மருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்" என்று சிவா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x