Published : 08 Jun 2022 12:00 PM
Last Updated : 08 Jun 2022 12:00 PM
சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் காவிரி மீதான பாசன உரிமையை நிலைநிறுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படவேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக ஆணையத்தின் தலைவர் அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த அணை கட்டப்படுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆணையம் இவ்வாறு அறிவித்திருப்பது வரம்புமீறிய செயல் என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் கிடைக்காமல் தமிழகம் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கெனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிருக்கிற நிலையில், தீர்ப்பின்படி மாதவாரியாக வழங்க வேண்டிய தண்ணீரையும் கிடைக்காமல் செய்யவே இந்த அணை கட்டப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் 17-ம் தேதி ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை தொடர்பானவற்றை உடனடியாக நீக்கி அறிவித்திட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
தமிழக அரசு, காவிரியின் மீதான பாசன உரிமையை நிலைநிறுத்தும் வகையில் விழிப்புடன் செயல்படுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT