Last Updated : 07 Jun, 2022 08:03 PM

 

Published : 07 Jun 2022 08:03 PM
Last Updated : 07 Jun 2022 08:03 PM

தமிழகத்தில் ‘1962’ இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2 ஆண்டுகளில் 2.53 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை

ஈரோட்டில் உள்ள கிராமத்தில் ஆடு இருக்கும் இடத்துக்கு கால்நடை ஆம்புலன்ஸ் மூலம் சென்று சிகிச்சை அளித்த மருத்துவர்.

கோவை: தமிழக அரசின் '1962' இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 2.53 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதில் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விபத்துகளால் ஏற்படும் எலும்புமுறிவு, நோய்பாதிப்பு, கன்று ஈனுவதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்படும் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத சூழலில், தமிழக அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் பெரிதும் உதவி வருகின்றன. இதன்மூலம் உரிய காலத்தில் உதவி கிடைப்பதால் கால்நடைகள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

முதலில் 2016-ம் ஆண்டு 5 மாவட்டங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், 2019 நவம்பரில் மாவட்டத்துக்கு ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் வீதம் 32 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை, ஜிவிகே-இஎம்ஆர்ஐ நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுத்திவரும் இந்தத் திட்டத்தில், கடந்த 2019 நவம்பர் முதல் 2022 மே வரை ‘1962’ என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு மொத்தம் 7.16 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன.

இதில், 6.08 லட்சம் அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 1.30 லட்சம் கால்நடை வளர்ப்போர் பயன்பெற்றுள்ளனர். மொத்தம் 2.53 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், பசு, காளை, எருமை வகைகளில் 1.38 லட்சமும், ஆடு வகைகளில் 75 ஆயிரமும், 31 ஆயிரம் கோழிகளும், இதர வகையில் வளர்ப்பு கழுதை, குதிரை, பன்றி என 7,929 விலங்குகளும் பயன்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக, நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி திட்டத்தின் தலைமை நிர்வாகி பால் ராபின்சன் கூறும்போது, “கால்நடை வளர்ப்போர் ‘1962’ என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் அந்த அழைப்பு சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். பின்னர், தேவைப்படும் உதவியைப் பொறுத்து, முதலில் அவசர உதவி தேவைப்படும் இடத்துக்கு ஆம்புலன்ஸ் அனுப்பிவைக்கப்படும்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கால்நடை ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. ஆனால், 24 மணி நேரமும் அழைத்து கால்நடைகளுக்கான உதவியை கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம். இந்த சேவை மூலம் அதிகப்படியான கால்நடைகள் பயன்பெற்ற மாவட்டங்களில் தேனி, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

சிறப்புகள் என்ன?

கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசியக் கருவிகள், உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை ஆம்புலன்ஸில் உள்ளன. இதில், ஒரு கால்நடை மருத்துவர், உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் இருப்பர். நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற ஏதுவாக, ஒன்றரை டன் எடை கொண்ட கால்நடையையும் தாங்கக்கூடிய வகையில் ‘ஹைட்ராலிக் லிப்ட்’ பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைத்திட இன்வெர்டர், மின்சார வசதியில்லாத இடத்தில் இரவில் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக, வாகனத்துக்கு வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய பெரிய விளக்கு பொருத்தப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x