Published : 10 May 2016 04:02 PM
Last Updated : 10 May 2016 04:02 PM

தண்ணீர் தட்டுப்பாடு, ஆக்கிரமிப்பில் சிக்கித் திணறும் குன்னூரை கைப்பற்றப்போவது யார்?

நீலகிரி மாவட்டத்தில் தனித் தொகுதியாக இருந்த குன்னூர் சட்டப்பேரவை தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு, தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டு, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு தாலுகாக்கள் உள்ளன.

குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் பா.மு.முபாரக் (திமுக), சாந்தி ஏ.ராமு (அதிமுக) ஆகியோரிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

தொகுதியை பொறுத்தவரை தேயிலை விவசாயம்தான் பிரதான தொழில். அரசு மற்றும் தனியார் தேயிலை ஏல மையங்கள் உள்ளன. இதனால் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் குடோன்கள் இப் பகுதியில் அமைந்துள்ளன. தேயிலை தொழிலை சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

பசுந்தேயிலைக்கு விலை இல்லாததால் பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்குபவர்கள் தேயிலை தோட்டங்களை அழித்து ஆடம்பர பங்களாக்களை எழுப்பி வருகின்றனர். இதனால் உள்ளூர் மக்கள் வேலை வாய்ப்பு இழந்து, பிழைப்பு தேடி சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

மேலும், தேயிலை குடோன்கள் மேட்டுப்பாளையத்துக்கு மாற்றப்பட்டு வருவதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்நோக்கி யுள்ளனர்.

மிகவும் குறுகிய நகரமான குன்னூரின் பிரதான பிரச்சினை தண்ணீர் மற்றும் ஆக்கிரமிப்பு. இந்த தொகுதிக்கு உட்பட்ட அதிகரட்டி, மேலூர் பகுதிகளில் அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் அதிகரிப்பால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகரின் தண்ணீர் தேவையை போக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆங்கிலேயர் கட்டிய ரேலியா அணையை மக்கள் நம்பியுள்ளனர்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிமுக அரசு எமரால்டு அணையிலிருந்து நீர் கொண்டு வரும் திட்டம் அறிவித்தது. ஆனால், இத் திட்டம் இது வரை இழுபறியாகவே உள்ளது. குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குன்னூர் நகரின் நுழைவுவாயிலில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குன்னூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சைக்காக கோவை செல்ல வேண்டிய நிலையுள்ளது என்றெல்லாம் தொகுதியில், புகார் பட்டியலாக நீள்கிறது. இந்த பிரச்சினைகளின் ஊடேதான் பிரச்சாரத்தில் நீந்திக் கடக்கிறார்கள் வேட்பாளர்கள்.

பா.மு.முபாரக் (திமுக)

திமுக வேட்பாளரான பா.மு.முபாரக்குக்கு குன்னூர் சொந்த ஊர் என்பதால் மக்கள் தன்னை எளிதாக சந்திக்கலாம் என வாக்குறுதி அளிக்கிறார். மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே தேயிலைக்கு ஆதார விலை பெற்று தருவதாகவும், அது வரை கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்க குறிப்பிடப்பட்டுள்ளதையும் பிரச்சாரத்தில் கூறுகிறார். ஜெகதளா பேரூராட்சியை குன்னூர் ஒன்றியக் குழுவுடன் இணைப்பதாகவும், போக்குவரத்து நெரிசலை தீர்க்க ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், கோத்தகிரி, குன்னூர் பேருந்து நிலையங்களை விரிவுப்படுத்தி நவீனப்படுத்துவதாகவும், பார்க்கிங் பிரச்சினையை தீர்க்க பல அடுக்கு பார்க்கிங் அமைக்கப்படும் எனவும் உறுதி கூறி வாக்குகள் சேகரிக்கிறார்.

சாந்தி ஏ.ராமு (அதிமுக)

அதிமுக வேட்பாளரான சாந்தி ஏ.ராமு, ‘தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், கிலோ ரூ.2 மானியம் வழங்கப்படுவதாகவும், தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும், முதல்வருக்கு விருப்பமான தொகுதி என்பதால், வெற்றி பெற்றால் மக்களுக்குத் தேவையான அனைத்து நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படும்’ என்று அழுத்தம்திருத்தமாகவே வாக்குறுதி அளிக்கிறார். வேட்பாளர்களின் வாக்குறுதிகள் கட்சித் தலைமையின் வாக்குறுதியை விட தொகுதிக்குள் ஓங்கி ஒலிப்பதை காணமுடிகிறது. அந்த ஒலி யாருக்கு வெற்றியை தரும் என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x