Published : 07 Jun 2022 08:10 AM
Last Updated : 07 Jun 2022 08:10 AM

அரசு போக்குவரத்துக் கழகத்தில் குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க திட்டம்: நஷ்டத்தை சமாளிக்க தமிழக அரசு முடிவு

ஜி.செல்லமுத்து

திருச்சி: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு இலவச பயணம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிக்கும் வகையில், குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கும் பொறுப்பு உள்ளிட்ட சில பிரிவுகளை தனியாரிடம் வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுதவிர, சென்னைமாநகர போக்குவரத்துக் கழகம், நீண்ட தூரபேருந்து சேவைக்கான அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவை தனித்தனியாக செயல்படுகின்றன. இவற்றில் 20 ஆயிரத்து 304 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 804 ஊழியர்கள் உள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்த நிலையில், தற்போது சகஜ நிலை திரும்பியுள்ளதால், தினமும் சுமார் 2 கோடி பேர் வரை அரசுப் பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதும், தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வருவதாகவே கூறப்படு கிறது. கடந்த 2019-2020-ம் ஆண்டில் ரூ.5,230.56 கோடியாக இருந்த வருவாய் இழப்பு, 2020-2021-ம் ஆண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக ரூ.8,378.53 கோடியாக அதிகரித்தது. ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபின் 2021-2022 ஆண்டில் ரூ.6,488.74 கோடியாக குறைந்தது.

இதனிடையே, பெண்களுக்கு நகரப் பேருந்துகளிலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம், எரிபொருள் விலை உயர்வு, விலைவாசி உயர்வால் பராமரிப்புச் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், வருவாய் இழப்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சில குறிப்பிட்ட பிரிவுகளில் நிர்வாக சீரமைப்பு செய்து தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: போக்குவரத்து வளர்ச்சி நிதிநிறுவனத்துக்கான பங்கு மூலதன நிதியுதவியாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலவச பயணம், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்றவற்றால் ஏற்படும் இழப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றை ஈடு செய்வதற்காகவும் நிகழ் நிதியாண்டில் ரூ.5,260.78 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனிடையே, அரசு நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கைநாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நகரப் பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டபோது 40 சதவீதமாக இருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த மாதம் 67 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்.30-ம் தேதி வரை 106 கோடி முறை பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம்

எனவே, வருவாய் இழப்பை ஈடுகட்டும்வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சியில் போக்குவரத்து மண்டல மேலாண்மை இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் நடத்தி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நிகர செலவு ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்குதல், புதிய பேருந்துகளை வாங்குதல், பராமரிப்பு செலவு ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதற்கட்டமாக சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சோதனை முறையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, கட்டணம் வசூலிக்கும் உரிமை போக்குவரத்துக் கழகத்திடமே இருக்கும் என்பதால் கடன் மற்றும் செலவுகளை குறைக்கலாம். மேலும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

இந்த முடிவுகள் அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு கிடப்பில் இருந்த நிலையில், இவற்றை செயல்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை டெல்லி அரசு பின்பற்றி வருகிறது. இதனால், 30 முதல் 50 சதவீத செலவினங்கள் கட்டுக்குள் வந்துள்ளது. இதேபோல, அகமதாபாத்திலும் 7 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசுபேருந்துகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

சேவை நோக்கம் கேள்விக்குறி

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறும்போது, ஏற்கெனவே பேருந்தின் அடிச் சட்டம் (சேசிஸ்), டயர் டியூப் பிளாப், உதிரி பாகங்கள் போன்றவை தனியார் வசம் உள்ளன. அதை வாங்குவதற்கு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடமும், வங்கிகளிலும், வெளிநாட்டு நிறுவனங்களிலும் கடன் பெறப்படுகிறது.

போக்குவரத்துக்கழக வருவாயில் இருந்து தான் திருப்பிச் செலுத்தப்படுகிறது. அரசின் நிதி உதவி எதுவும் இல்லை. ஒரு ரூபாய் வருவாயில் 70 பைசா தனியாருக்குச் செல்கிறது. இந்தநிலையில் சில குறிப்பிட்ட பிரிவுகளை தனியார் வசம் ஒப்படைத்தால், லாப நோக்குடன் மட்டுமே செயல்படுவார்கள். இதனால் பொதுமக்களுக்கான சேவை நோக்கம் கேள்விக்குறியாகும் என்பதால் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x