Published : 06 Jun 2022 08:27 PM
Last Updated : 06 Jun 2022 08:27 PM
சேலம்: ''பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியை வளர்க்கவும், தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டி பேசுவது இயல்பு'' என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மை பயக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். ஆனால், சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், நான் முதல்வராக இருந்தபோது, சேலம் மாவட்டத்துக்கும், குறிப்பாக எடப்பாடி தொகுதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கால்நடை பூங்கா, கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு கல்லூரி, பாலிடெக்னிக், கால்நடை மருத்துவமனைகள், நூலகங்கள், விளையாட்டு அரங்கம், சாலை வசதி, மேம்பாலங்கள், வறண்ட 100 ஏரிகளுக்கு மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் ஏரியை நிரப்பும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
சேலம் மாவட்டத்துக்கு என தனித்துவமாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் என் மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்தி களங்கம் ஏற்படுத்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆட்சிக்கு வந்தால் போதும் என்ற சூழ்நிலையில், ஏராளமான வாக்குறுதிகளை அளித்து, அதை செயல்படுத்தாமல் ஊழலில் திமுக திளைத்துவருகிறது. பொதுமக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளது. குறிப்பாக நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது.
குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், சிலிண்டர் விலை மானியம் ரூ.100 குறைப்பு, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, முதியோர்களுக்கு பென்ஷன் தொகை உயர்வு என பல்வேறு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாத அரசாக திமுக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதன்மையான முதல்வர் என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின், இந்தியாவிலேயே அதிக ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தாமல், வருமானம் வரக்கூடிய திட்டங்களுக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் முன்னுரிமை அளிக்கிறார். இதற்கு எடுத்துக்காட்டு சென்னையில் சமீபத்தில் பிரதமர் கலந்துகொண்ட விழாவில், வருமானத்துக்கு வழிவகுக்கும் திட்டங்களை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையாக வைத்தார்.
நூல் விலை உயர்வு, நெசவாளர்களின் பிரச்சினை குறித்து எந்த கோரிக்கையும் பிரதமரிடம், முதல்வர் ஸ்டாலின் வைக்கவில்லை. ஆனால், பிரதமர் தமிழகம் வந்தபோது, அதிமுக சார்பில் நெசவாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தீர்வு காண வேண்டி விரிவாக எடுத்துக் கூறி, கோரிக்கை முன் வைத்துள்ளோம்.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதோடு, நில அபகரிப்பு பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க சொல்லி பல்வேறு போராட்டம் நடத்தியும் , சட்டமன்றத்தில் எடுத்துக் கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. நகைக்கடன் தள்ளுபடி விஷயத்தில் 48 லட்சம் விவசாயிகளையும், பொதுமக்களையும் முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை அரசு கண்டுகொள்ளவில்லை. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தங்குதடையின்றி நடந்து வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியை வளர்க்கவும், தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டி பேசுவது இயல்பு'' என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT