Published : 06 Jun 2022 06:19 PM
Last Updated : 06 Jun 2022 06:19 PM

ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு வாபஸ்: வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜாமீன் வழங்க கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, மனு வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழிக்கு கொண்டு செல்வதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மதன் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவினர் கடந்த (2021) ஆண்டு ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். பின்னர் சைபர் சட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன் தரப்பில், விளையாட்டின் போது பேசிய வார்த்தைகளை மட்டுமே காரணம் காட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் விளையாட்டில் கலந்துகொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், பண மோசடி செய்த தொகையில் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய், 2 கார்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த விளையாட்டில் விரும்பி சேர்ந்தவர்களிடம் மட்டுமே விளையாட்டின் மூலம் உரையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையிலேயே உள்ளது. 316 நாட்களாக சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, காவல்துறை தரப்பில், விளையாட்டில் கலந்து கொண்டவர்களிடம் கரோனா நிதி என கூறி 2 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளதாகவும், விளையாட்டில் சேரும் சிறுவர்களை தவறான வழியில் நடத்தியதாகவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போதைய நிலையில், ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதி தெரிவித்தார். அப்போது மதன் தரப்பில் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி , மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x