Published : 06 Jun 2022 05:42 PM
Last Updated : 06 Jun 2022 05:42 PM

ஊடக வெளிச்சத்துக்காகவே அரசு அலுவலங்களில் ஸ்டாலின் ஆய்வு: டிடிவி தினகரன் சாடல்

நீலகிரியில் பழங்குடியின மக்களுடன் டிடிவி தினகரன்.

குன்னூர்: “ஊடக வெளிச்சத்திற்காகவே முதல்வர் ஸ்டாலின் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்கிறார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஓராண்டுகால திமுக ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஆனவுடன் ஸ்டாலின் மறந்துவிட்டார். குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார்; அதை மறந்துவிட்டார்.

சொத்து வரியை உயர்த்த மாட்டேன் கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக கூறினார். அதை மறந்துவிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு கொண்டு அனைத்து திட்டங்களும் எல்லாவற்றையும் மூடுவிழா செய்துவிட்டனர்.

நீட் தேர்வை வந்தவுடன் ஒரே கையெழுத்தில் ரத்து செய்வதாக சொன்னார்கள். ஆனால் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு விடியல் கொண்டு வருவேன் என்று கூறினார்கள். ஆனால் இருண்ட தமிழகமாகவே உள்ளது.

சசிகலா பாஜகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று நயினார் நாகேந்திரன் கூறிவருகிறார். அதுகுறித்து சசிகலாதான் கூறவேண்டும்.

திமுக ஆட்சி விளம்பரங்களால் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, லஞ்ச ஊழல் ஓழிப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சத்திற்காக ஸ்டாலின் செய்கிறார்.

அப்பாவுக்கு சிலை திறப்பதற்கு பதிலாக தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும். செல்லும் இடமெல்லாம் ஸ்டாலினிடம் மக்கள் இதைத்தான் கேட்கிறார்கள். காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பதால் அத்து மீறி செயல்படுவது மக்கள் மத்தியில் அவப்பெயரைத்தான் ஏற்படுத்துகிறது. காவல் துறையினர் கவனமுடன் செயல்படவேண்டும்.

அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x