Published : 06 Jun 2022 04:27 PM
Last Updated : 06 Jun 2022 04:27 PM
கன்னங்குறிச்சி பேரூராட்சியை தூய்மையான பகுதியாக மாற்றிட உறுதி பூண்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் `இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடைபெற்ற `உங்கள் குரல்-தெருவிழா’ நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் செ.குபேந்திரன் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக அந்தந்த பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், `இந்து தமிழ்' திசை நாளிதழ் `உங்கள் குரல்-தெருவிழா' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் `உங்கள் குரல்-தெருவிழா' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் பேரூராட்சித் தலைவர் செ.குபேந்திரன், துணைத் தலைவர் ஜெயந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் லாரன்ஸ், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ‘இந்து தமிழ் திசை’ விற்பனைப் பிரிவு முதுநிலை துணை மேலாளர் விஜயகுமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் புகார்கள், கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்ட பேரூராட்சித் தலைவர் செ.குபேந்திரன் அவற்றுக்கு பதிலளித்துப் பேசியதாவது; பொதுமக்களை நேரடியாக சந்திக்க ‘இந்து தமிழ் திசை’ சார்பில் `உங்கள் குரல் - தெரு விழா’ நிகழ்ச்சி மூலம் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னங்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 26 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிப் பகுதிகளில் தேவையான சாலை, சாக்கடை, கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதியதாக குடியிருப்புகள் உருவாகி கொண்டிருக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதை முதல் கடமையாகக் கொண்டு செயலாற்றி வருகிறோம். மஞ்சள் பை அவசியம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் தினமும் 5 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
இதில் ஒரு டன்னுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகளாக இருப்பது கவலை அளிக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மஞ்சள் பை, பாத்திரம் கொண்டு செல்வதில் தயக்கம் காட்டக் கூடாது. கன்னங்குறிச்சி பேரூராட்சியை தூய்மையான பகுதியாக மாற்றிட உறுதி பூண்டுள்ளோம். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சியை வரும் நாட்களில் செயல்படுத்திட முடிவு செய்துள்ளோம். எனவே, கன்னங்குறிச்சி பொதுமக்கள் வீதிகளையும், பொது இடங்களையும் தங்களது சொந்த வீடாக பாவித்து பிளாஸ்டிக் பொருட்களை வீசி எறிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பேரூராட்சிப் பகுதியில் நாய் தொல்லை இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக பேரூராட்சி செயல் அலுவலருடன் கலந்தாலோசித்து நாய் தொல்லை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடர்பாடு ஏற்படுவதாக மக்கள் கூறுவதால், கடையை இடம் மாற்றிட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கன்னங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து அடிவாரம் வரை முதல்கட்டமாக ஷேர்-ஆட்டோ இயக்குவதற்கான நடவடிக்கையும், மக்களின் தேவையை பொருத்து, பின்னாளில் சிற்றுந்து இயக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கன்னங்குறிச்சி கேசவன் நகர் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. வேறு இடம் இல்லாததால் அங்கு கொட்டப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்கும், மக்காத குப்பையாக பிரித்து, குப்பைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் மயானத்தில் இருந்து வெளியேறும் புகையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து, தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைப்படி புகை மேல் நோக்கி செல்லவும், வெளியில் பிரேதங்கள் எரிப்பதை தவிர்க்கவும் பேரூராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மூக்கனேரியில் சாக்கடை கழிவு கலப்பது நிறுத்தப்பட்டு விட்டது. சாக்கடை கழிவுகள் பிரச்சினைக்கு ரூ.40 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கன்னங்குறிச்சி ‘சன் பேலஸ்’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள காலி இடத்தில் பூங்கா அமைப்பது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க , விரைவில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கன்னங்குறிச்சியில் 981 தெரு விளக்குகள் உள்ளன. புதியதாக குடியிருப்பு உருவாகும் பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாமல் உள்ளது. அங்கும் புதியதாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியை ஆசிரியை ஹேமலதா தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT