Published : 06 Jun 2022 03:37 PM
Last Updated : 06 Jun 2022 03:37 PM
சென்னை: "மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையை துறை அதிகாரிகளும், அலுவலர்களும் தான் காப்பாற்ற வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 6) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்தத் துறையானது ஸ்கூட்டர் கொடுத்தோம், கருவிகளைக் கொடுத்தோம், நிதி கொடுத்தோம் என்று மட்டும் சொல்லாமல், நம்பிக்கையும் கொடுத்தோம் என்று சொல்லும் அந்த அளவுக்கு இந்தத் துறை செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய நம்பிக்கையை உருவாக்குவது சாதாரணமான காரியம் அல்ல, அதற்கு இந்தத் துறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் முதல் சாதாரண அலுவலர் வரைக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியை ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
துறையை நோக்கி வருபவர்கள் சிலர்தான். அந்த சிலரது கோரிக்கைகளை செவி மடுத்துக் கேட்க வேண்டும். உடனடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், சில வாரங்களுக்குள்ளாவது நிறைவேற்றித் தர வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையை துறை அதிகாரிகளும், அலுவலர்களும்தான் காப்பாற்ற வேண்டும்.
இன்றைக்கு இந்தத் துறையில் சிலவற்றில் நாம் இன்னும் அதிக கவனம் செலுத்தி, மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். UDID அட்டைகள் வழங்குவதில் கொஞ்சம் சுணக்கம் தெரிகிறது. அது உடனடியாக நீக்கப்பட்டு, கார்டு வழங்குவது விரைவுபடுத்தப்பட வேண்டும்.
அனைத்து திட்டங்களின் பயன்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு தங்குதடையின்றி சென்றிட, ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை அளிப்பதில் சுகாதாரம், குழந்தைகள் நலத்துறை, கல்வித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நலத்திட்டங்களை கொடுப்பதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும். பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதோடு, தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக நல வாரியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான மாநில அளவிலான ஆலோசனை வாரியம் போன்றவற்றின் கூட்டங்களை அடிக்கடி நடத்தி, மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை, இதுவரை எந்த அரசும் உருவாக்காத அத்தியாயத்தை உருவாக்கிட வேண்டும் என்று இத்துறையின் அமைச்சர் என்ற முறையிலும் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், மாற்றுத் திறனாளிகளை கை தூக்கி விடும் துறையாக இந்தத் துறை செயல்பட வேண்டும்.
அனைத்து துறை வளர்ச்சி - அனைத்து மக்களின் வளர்ச்சி - என்ற திராவிட மாடலுக்குள் இது போன்ற விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தான் அடங்கி இருக்கிறது. அவர்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களது மகிழ்ச்சியில் தான், என்னுடைய மகிழ்ச்சி, இந்த அரசாங்கத்தினுடைய மகிழ்ச்சி இருக்கிறது. ஏன், இந்தத் துறையில் பணியாற்றும் அனைவரின் மகிழ்ச்சியும் இருக்கிறது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT