Published : 06 Jun 2022 12:01 PM
Last Updated : 06 Jun 2022 12:01 PM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோர் இன்று (ஜூன் 6)பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சவுந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி பரிந்துரைத்தது. முதல்கட்டமாக என்.மாலா, எஸ். சவுந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து, அவர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில் சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். இரு புதிய நீதிபதிகளும், இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், புதிய நீதிபதிகளை, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர். அப்போது அவர்கள், புதிய நீதிபதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.
இறுதியில், நீதிபதி சுந்தர் மோகன் தனது ஏற்புரையில், "அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் ஜூனியராக பணியாற்றிய போது, குற்ற வழக்குகளை கையாள்வது குறித்த விவரங்களை தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.மேலும், தொழில் முறையில் தனக்கு உதவியாக இருந்த தனது மூத்த வழக்கறிஞர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு நன்றி" தெரிவித்தார்.
நீதிபதி குமரேஷ் பாபு தனது ஏற்புரையில், "வழக்காடும் முறையை கற்றுக் கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கும், மூத்த வழக்கறிஞர்களுக்கு நன்றி " தெரிவித்தார்.
இவர்களின் நியமனங்கள் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்து, காலியிடங்கள் 17ஆக குறைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75.
நீதிபதி சுந்தர் மோகன்: கடந்த 1969-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி சுந்தர் - சுப்புலட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தந்தை வழக்கறிஞர், தாய் ஆசிரியர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1991ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.
நீதிபதி கே.குமரேஷ் பாபு:சென்னையைச் சேர்ந்த இவரது தந்தை கபாலி சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.முதல் பட்டதாரியான இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சட்டம் முடித்து 1993ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கினார்.
தமிழக அரசின் சார்பில் 2001 முதல் 2002-ம் ஆண்டு வரை அரசு வழக்கறிஞராகவும் 2020 முதல் 2021 வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் பல வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT