Published : 06 Jun 2022 04:58 PM
Last Updated : 06 Jun 2022 04:58 PM
பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக, அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் ‘உங்கள் குரல்- தெரு விழா’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் தர், நகராட்சி பொறியாளர் நடராஜன், மேலாளர் பழனி உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், நகராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் காஞ்சனா சுதாகருடன் பொதுமக்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில் சாலைமற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதிகளை மேம்படுத்த வேண்டும், மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பூங்காக்களை சீரமைக்க வேண்டும், பன்றி, நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும், சேதமான மின்கம்பங்களை மாற்ற வேண்டும், அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டபின் காஞ்சனா சுதாகர் பதில் அளித்து பேசியதாவது: பூந்தமல்லி நகராட்சி தலைவராக பதவி ஏற்ற 2 மாதங்களில், நகராட்சியில் உள்ள21 வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அந்த ஆய்வின் அடிப்படையில், சாலைகளைமேம்படுத்தும் பணி, மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளன.
மழைநீர் வடிகால்வாய் இல்லாத பகுதிகளில்அதை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதேபோல், சீரமைக்கப்படாத பூங்காக்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், பை-பாஸ் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புதிய பூங்கா, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் எல்இடி விளக்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ரூ.36.28 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்படும்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வார்டு வாரியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்துவருகிறோம். மேலும் தொகுதியின் எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி மூலம் நேமம் ஏரியிலிருந்து, பூந்தமல்லி நகராட்சிக்கு குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான குழாய் இணைப்பு ஓர் ஆண்டில்கொடுக்கப்படும். அதன்பிறகு, குடிநீர் பிரச்சினை இருக்காது. மேலும், 3 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.குன்றத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குளம், குட்டைகள் புனரமைக்கும் பணி, ஆழப்படுத்தும் பணி, சுந்தர் நகர் பூங்கா புதுப்பிக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.
தெருக்களில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும், அடுத்த 3 மாதங்களில் பன்றி, நாய் தொல்லைகள் தீர்க்க நடவடிக்கைஎடுக்கப்படும். நகராட்சியில் 2024 டிசம்பருக்குள் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி பகுதிகளில் திருட்டு பயம் அதிகம்உள்ளதால், இரவு நேரங்களில் கூடுதல் ரோந்துசெல்ல காவல்துறையிடம் கூறப்பட்டுள்ளது. மேலும் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் நமக்கு நாமே திட்டம் மூலம் அமைக்கப்படும்.
நடைபாதை கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய பூந்தமல்லி நகராட்சியில் இடம் தேடிவருகிறோம். விரைவில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை அதிகாரிகளுடன் பேசி உரிய தீர்வு காணப்படும்.
நகராட்சி பகுதிகளில் புனரமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானங்களில் குழந்தைகளுக்கான தனி இடம் ஒதுக்கப்படும். மேலும்அவர்களுக்கு ரூ.2.50 கோடியில் அறிவுப் பூங்காஅமைக்க இடம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நகராட்சியில் மீன் அங்காடிகள், காய்கறி அங்காடிகள் உள்ளிட்டவை அடங்கிய வணிக வளாகம் அமைப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் குடிநீர், குப்பை, கழிவுநீர் ஆகிய முக்கிய அடிப்படை பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிப்பதற்காக வாட்ஸ்- அப் எண்விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பொதுமக்கள் மழைநீர் கால்வாயில் கழிவுநீரை கலக்கச் செய்வதை தவிர்க்க வேண்டும். மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் பூந்தமல்லி நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவை நிறைவேற்றப்படும்’ என்று நகராட்சி பொறியாளர் நடராஜன் தெரிவித்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கிண்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.சுமதி பங்கேற்றார். நிகழ்ச்சியை ஆசிரியை இரா.கலையரசி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியை பூவை ஜெ.சுதாகர் இணைந்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT